அரசுமுறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று இரவு 10 மணியளவில் தாயகம் திரும்பினார். இவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த 9 நாள் சுற்றுப்பயணத்தில் சுமார் 1,300 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது.


வருகின்ற ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழ்நாடு அரசு நடத்துகிறது. இதற்காக வெளிநாட்டில் இருக்கும் முதலீட்டாளர்களை பங்கேற்குமாறும், புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாள் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு கடந்த 23ம் தேதி பயணம் மேற்கொண்டார்.


வெளிநாட்டு வெற்றிகரமாக இருந்ததாக சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டியளித்தார். அதில், "ரூ. 3,233 கோடி மதிப்பிலான கையெழுத்தாகியுள்ளன. இந்த பயணத்தின் மூலம் குறைந்தபடசம் ரூ.3000 கோடியை ஈர்க்க திட்டமிட்டோம். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். உலக முதலீட்டாளர் மாநாட்டை தமிழ்நாடு அரசு வெற்றிகரமாக நடத்தவுள்ளது" என தெரிவித்தார். 


ரெய்டு குறித்த கேள்விக்கு ”வருமான வரித்துறையையும், அமலாக்கத்துறையையும் அச்சுறுத்துவதற்காகவே பயன்படுத்தி வருகிறது மத்திய அரசு” என தெரிவித்தார்


முன்னதாக இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில், “முதலீட்டாளர்களைத் தமிழ்நாட்டை நோக்கி ஈர்த்திட சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகளுக்கு நான் மேற்கொண்ட 9 நாள் பயணத்தை நிறைவுசெய்து தாயகம் திரும்புகிறேன். என் பயண அனுபவங்களைச் சிறு டைரி குறிப்பு போல் உங்களுடன் பகிர்கிறேன்” என தெரிவித்துள்ளார்


மே 23-செவ்வாய்


2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு சிங்கப்பூர் - ஜப்பான் நாட்டின் நிறுவனங்களை அழைப்பதுதான் பயணத்தின் முதன்மையான நோக்கம் என்பதை செய்தியாளர்களிடம் தெரிவித்தேன். சிங்கப்பூரில் தமிழ்ச் சொந்தங்கள் ஹோட்டல் வரவேற்பரங்கில் காத்திருந்து, அன்பைப் பொழிந்து வரவேற்பளித்தனர்.


ஹோட்டல் அறையில் அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் சிங்கப்பூர் பயணத் திட்டம் குறித்த ஆலோசனை.


மே 24-புதன்


தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக சிங்கப்பூரைச் சேர்ந்த மூன்று முக்கிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடன் தனித்தனியான சந்திப்பு.


புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.



  •  இனிய நண்பர் ஈஸ்வரன் அவர்களுடன் புறப்பட்டு, சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடனான கருத்தரங்கில் பங்கேற்றேன்.

  • முதலீட்டாளர்களுடனான உரையாடலின் போது தமிழ்நாட்டுக்கும் சிங்கப்பூருக்கும் உள்ள நீண்டகால உறவை எடுத்துக்கூறி, முதலீட்டாளர் மாநாட்டுக்கான அழைப்பு விடுத்தேன்.

  • சிங்கப்பூரின் வளர்ச்சியில் தமிழர்களின் உழைப்பை மதித்துப் போற்றி - நிர்வாக மொழிகளில் ஒன்றாகத் தமிழையும் இடம்பெறச் செய்த மாண்பாளர் லீ குவான் யூ அவர்களுக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்றும், மன்னார்குடியில் ஒரு நூலகம் அமைக்கப்பட்டு, சிலை நிறுவப்படும் என அறிவித்தேன்.


மே 25-வியாழன்



  • தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களால் தொடங்கப்பட்ட ‘தமிழ் முரசு' இதழுக்கு நேர்காணல் அளித்தேன்.

  • சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதிக்குச் சென்று, தமிழர்களுடன் தேநீர் அருந்தியும், செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தேன்.


மே 26 -வெள்ளி



  • ஒசாகாவில், டைசல் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

  • ஒசாகா முதலீட்டாளர்களுடனான கருத்தரங்கம் நடைபெற்றது.

  • கோமாட்சு என்ற பிரம்மாண்டமான தொழிற்சாலைக்குச் சென்றோம்.

  • ஓரகடத்தில் உள்ள கோமாட்சு நிறுவனத்தை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில் முதலீடு செய்ய வேண்டும் என ஒசாகாவில் உள்ள தலைமை நிறுவனத்தாரிடம் தெரிவித்து, முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தேன்.


மே 27- சனிக்கிழமை



  • ஒசாகா கோட்டையை சுற்றிப் பார்த்தேன்.

  • 'தி இந்தியன் கிளப்' சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பண்பாட்டு விழாவில் பங்கேற்றோம்.

  • விழாவில் பரதநாட்டியம் அரங்கேற்றப்பட்டது. ஜப்பான் நாட்டில் பரதநாட்டியக் கலையை முதன்முதலில் கற்றுக் கொண்டவரான அகிமி சகுராய், அதனை ஜப்பானிய மாணவியர் பலருக்கும் கற்றுத் தந்திருக்கிறார். அவர்கள் மிகச் சிறப்பாக ஆடினர். விழாவுக்கு வந்திருந்த அகிமி சகுராய் அவர்களை வாழ்த்தினேன்.


மே 28-ஞாயிறு



  • ஒசாகாவிலிருந்து டோக்கியோவுக்கு இரண்டரை மணி நேரத்தில் 500கி.மீ புல்லட் ரயில் பயணம்.

  • நம் நாட்டின் நினைவு வந்தது. இப்போதுதான், 5 மணி நேரம் 50 நிமிட நேரப் பயணத்தில் 500 கிலோ மீட்டரைக் கடக்கும் 'வந்தேபாரத்' ரயில் அறிமுகமாகியிருக்கிறது.

  • டோக்கியோவில் இந்தியாவுக்கான தூதர் திரு.சிபி ஜார்ஜ் அவர்கள் வரவேற்பு அளித்தார்.

  • டோக்கியோவில் உள்ள தமிழர்கள், தமிழ்ச் சங்கங்கள் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

  • பண்பாட்டு விழாவை அருமையான தமிழ்ப்பாடலுடன் தொடங்கினர்.

  • பறை இசையால் அரங்கம் அதிர்ந்தது. நடனங்கள், தற்காப்புப் பயிற்சிகள் எனத் தமிழர் கலைகளை சிறப்பாக வெளிப்படுத்தினர்.


மே 29-திங்கள்



  • ஜப்பானில் உள்ள தொழில் நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் அரசு நிறுவனமான ‘ஜெட்ரோ’வின் சேர்மனுடனான சந்திப்புடன் காலைப் பொழுது தொடங்கியது.

  • அதன் சேர்மனுடன், டோக்கியோவில் முதலீட்டாளர் கருத்தரங்கத்திற்குச் சென்றேன்.

  • ஏறத்தாழ 250 தொழில் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பங்கேற்றிருந்தனர்.


டோக்கியோ முதலீட்டாளர் கருத்தரங்கில் நான் பேசுகையில், 'உள்கட்டமைப்பு சார்ந்த துறைகளில் உங்கள் முதலீடுகளைச் செய்யுங்கள். அதுபோல ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி சார்ந்த துறைகளுக்காக சென்னையில் உங்கள் நிறுவனங்களின் அலுவலகம் அமைய வேண்டும். எங்களிடம் மனித வளம் நிறைய உள்ளது' எனக் கேட்டுக்கொண்டு, முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தேன்.


திங்கள் மாலையில் ஜப்பான் தொழில்நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுடன் நேரடிச் சந்திப்பு நடைபெற்று, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.


மே 30-செவ்வாய்


காலையில் என்.இ.சி. எனப்படும் எதிர்காலத் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளின் முன்னணி நிறுவனத்தைப் பார்வையிடச் சென்றோம். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கு இத்தகைய திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க என்.இ.சி. முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். இந்தியாவில் உள்ள தங்கள் அலுவலகத்துடன் இதுகுறித்துப் பேசி, நல்ல முடிவைத் தெரிவிப்பதாக என்.இ.சி. நிறுவனத்தினர் கூறினர்.


மாலையில் ஓம்ரான் என்ற நிறுவனத்துடன் சந்திப்பு.


இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் ஒப்பந்தம் செய்துள்ளது.



  • உலகின் மூன்றாவது உயரமாக கட்டடமான ஸ்கை ட்ரீ என்ற கட்டடத்திற்குச் சென்றோம். டோக்கியோ நகரத்தின் பேரழகை ரசித்தோம்.

  • தமிழ்நாட்டை உலகளவில் உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்லவேண்டும் என்ற உன்னத இலட்சியமே மனதில் தோன்றியது.


தமிழ்நாட்டின் மீதும் - தமிழ்நாடு அரசின் மீதும் - தமிழ்நாட்டு மக்களின் மீதும் மிகப்பெரிய நம்பிக்கையை ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் தொழில் முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தமிழ்நாட்டில் ஜனவரி 2024-இல் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு 'வருக வருக' என அனைவரையும் அழைத்து, 'கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சி போலன்றித் தமிழ்நாடு மாறியிருக்கிறது. தமிழ்நாடு அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது' என்ற நம்பிக்கையை தொழில் முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்திய மனமகிழ்வுடன், வெற்றிகரமாக சென்னை திரும்புகிறேன்.


உடன்பிறப்புகளின் முகம் காண உங்களில் ஒருவனான நான் ஆவலுடன் இருக்கிறேன். நமக்கான பணிகள் காத்திருக்கின்றன. முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை சிறப்பாகக் கொண்டாடுவோம். அவர் உருவாக்கிய நவீனத் தமிழ்நாட்டை, முதன்மை மாநிலமாக உயர்த்திக் காட்டுவோம்."என குறிப்பிட்டு இருந்தார்.