கர்நாடக அரசு கடந்த சில ஆண்டுகளாக காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணையை கட்டியே தீருவோம் என்று கூறிவருகிறது. அதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க மத்திய அரசிடம் ஒப்புதலும் பெற்றுள்ளது. தமிழக அரசு தொடர்ந்து கர்நாடக அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.


இந்த நிலையில், அந்த மாநிலத்தின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள பசவராஜ் பொம்மை கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டியே தீரும் என்று உறுதியுடன் கூறினார். மேலும், இதற்காக அவர் பிரதமர் மோடி மற்றும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்தும்  பேச்சுவார்த்தை நடத்தினார்.


கர்நாடக முதல்வரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழக பா.ஜ.க.வின் புதிய தலைவரான அண்ணாமலை மேகதாது அணையை கட்ட கர்நாடகா ஒரு செங்கலை கூட எடுத்துவைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறினார். அவரது பேச்சு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க. எம்.பி.யுமான தயாநிதி மாறன், தமிழ்நாடு பா.ஜ.க. போராடினாலும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ள நிலையில், மாவீரன் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம்  என்று கூறினார்.






தயாநிதி மாறனின் கருத்துக்கு தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை, தயாநிதி மாறன் போல பெருந்தொற்று காலத்தின் இடையில் டி20 ஆட்டத்தை பார்க்காமல், நான் எப்போதும் நமது விவசாயிகளுக்காக தயாராக இருப்பேன். அவர்களது குடும்பத்திற்கு சொந்தமான ஜெட் விமானத்தை எனது எளிமையான மற்றும் பணிவான  விவசாய நண்பர்கள் விரைவில் சென்றடைய கடனாக தர வேண்டும். அதற்கு அவரது மாமா மு.க.ஸ்டாலின் ஒத்துக்கொள்வாரா?


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


ஐ.பி.எல். போட்டிகளில் ஆடிவரும் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி தயாநிதி மாறன் சகோதரர் கலாநிதி மாறனின் சன்குழுமத்திற்கு சொந்தமானது என்பதும், கடந்த சட்டமன்ற தேர்தல் பரப்புரையின்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வதற்கு தனி விமானத்தில் தினசரி சுற்றுப்பயணம் மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.