தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்தார். அதிகபட்சமாக, தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் 87.33 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்த பட்சமாக, சென்னையில் உள்ள வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
திமுக, அதிமுக, நாம் தமிழர், அமமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பால்வேறு கட்சிகள் தேர்தலைச் சந்தித்தன. திமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் இளம் மற்றும் புதிய வாக்காளர்களை குறிவைத்தனர். புதிய வாக்காளர்களின் வருகையே தேர்தலின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் என்றும் பொருள் கொள்ளப்பட்டது.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலும் திமுக தலைமயிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும் என்று கணித்திருந்தன. ஆனால், தேர்தலில் பதிவான ஒட்டுமொத்த வாக்குப்பதிவு குறைந்து காணப்படுவதால் ஆட்சிக்கு எதிரான மனநிலை எழவில்லையா? இது திமுகவுக்கு பாதகமாக அமையுமா? ஆளும் அதிமுகவுக்கு சாதகமாக அமையுமா? போன்ற பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் எழத்தொடங்கியுள்ளது.
அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில், முந்தைய தேர்தலை விட வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகரிக்குமாயின், அது ஆட்சி மாற்றத்திற்கான சமிக்கையாக அமையும். அரசுக்கு எதிரான தங்கள் எதிர்ப்பை பதவி செய்ய, ஆட்சி மாற்றத்தை உருவாக்க பெரும்பாலானோர் தேர்தலில் பங்கு கொள்கின்றனர். நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலிலும் இந்த போக்கு காணப்பட்டது.
இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளில் இந்த போக்கு காணப்படுகிறதா? என்பது மிகப்பெரிய கேள்வியாகவே உள்ளது. இந்தியாவில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளில் கூடுதல் வாக்குப்பதிவுக்கும், ஆளுங்கட்சிக்கும் எதிரான மனநிலைக்கும் தொடர்புகள் இல்லை என்ற அநேக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் முன்னணி அரசியல் நிபுணர்களில் ஒருவரான சஞ்சய் குமார், தி இந்து நாளிதழுக்கு எழுதிய கட்டுரயில் " அதிக வாக்குப்பதிவுக்கும் - ஆட்சி மாற்றத்துக்கும் உள்ள இணைப்பை யார் உருவாக்கியது என்றே தெரியவில்லை. இந்த பொய்யான இணைப்பு காலம் காலமாக கூறப்பட்டு வருகிறது. உண்மையில், இரண்டிற்கும் தொடர்பு இருப்பதாக நான் நினைக்கவில்லை. இந்தியாவில் கூடுதல் வாக்குப்பதிவு ஆளுங்கட்சிக்கு ஆதாரவான சூழலை ஏற்படுத்தும் என்பதற்கான சான்றுகள் கூட உண்டு" எனக் குறிப்பிட்டார்.
1989–2014 காலகட்டங்களில் இந்தியாவில் நடைபெற்ற அநேக சட்டமன்றத் தேர்தல்களை ஆய்வு செய்த டி.குமார் தனது ஆய்வுக் கட்டுரையில் , தேர்தல் வாக்குப்பதிவுக்கும், தேர்தல் முடிவுகளுக்கும் எந்தவித தொடர்புமில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
1980 - 2012 இந்தியாவில் நடைபெற்ற 128 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்த Milan Vaishnav தனது ஆய்வுக் கட்டுரையில்," கூடுதல் வாக்குப்பதிவுக்கும், ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனக் குறிப்பிட்டார்.
2006 தமிழக சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், 2011 சட்டமன்றத் தேர்தலில் கூடுதலாக 7.2 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆளுங்காட்சிக்கு எதிரான நிலைப்பாடு இதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது. அத்தேர்தலில், ஆளும் கட்சியாக இருந்த திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வியை சந்தித்தது. ஆனால், 2௦௦1 சட்டமன்றத் தேர்தலில் இதே போக்கு காணப்படவில்லை. உதாரணமாக, 2001 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிரான நிலைப்பாடு இருந்தாலும்,1996 சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில், 7.88 சதவீத வாக்குகள் அந்த தேர்தலில் குறைவாகவே பதிவாயின.
மேலும், 2016 சட்டமன்றத் தேர்தலில்,133 சட்டமன்றத் தொகுதிகளில் 75 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில், 78 இடங்களை அதிமுக கைப்பற்றியது. திமுக வெறும் 54 இடங்களை கைப்பற்றியது. 2016 சட்டமன்றத் தேர்தலில், மாநில சராசரியை விட அதிகமாக வாக்குப்பதிவான இடங்களில் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. கூடுதல் வாக்குப்பதிவு ஆளும்கட்சிக்கு சாதகமாகத் தான் அமைந்தன.
எனவே, தமிழகத்தில் குறைவான வாக்கெடுப்பு ஆளும்கட்சிக்கு பாதகமாக கூட அமையலாம். வாக்கெடுப்புக்கும், தேர்தல் முடிவுகளுக்கும் உள்ள தொடர்பை முழுமையாக தெரிந்து கொள்ள மே 2ம் தேதி வரை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அழுத்தமான தேர்தல்:
2௦11 சட்டமன்றத் தேர்தலுக்கும், இந்த சட்டமன்றத் தேர்தலுக்கும் அதிகப்படியான மாற்றங்களை காண முடிந்தது. உதரணாமாக, 2௦11 சட்டமன்றத் தேர்தல் ஜெயலலிதா, மு.கருணாநிதி இவர்களில் யார் முதல்வர் என்ற கேள்வியோடு நின்றுவிட்டது. ஆனால், இந்த தேர்தலில் வகுப்புவாதம், ஊழல், மாநில உரிமை, ஊழல், தமிழர் பண்பாடு, உரிமை, நாகரிகம் உள்ளிட்டவை பேசுப்பொருளாக்கப் பட்டன.
2001 (திமுக - பாஜக கூட்டணி) சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தற்போது தான் திமுகவால் ஆரியம்- திராவிடம் என்ற சொல்லாடலுக்குள் தேர்தலை கொண்டு செல்ல முடிந்தது.
மேலும், பாஜகவும், நாம் தமிழர் கட்சியும் இந்தத் தேர்தலில் தான் ஒரு வலுவான கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது.
ஜெயலலிதா- ஜானகி பிளவைப் போன்று இந்த தேர்தலிலும் அமமுகவின் தாக்கங்கள் உணரப்படும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு அறிவிப்பின் மூலம் அதிமுக தனது விளிம்பு நிலை மக்களுக்கான அரசியலை ஆழப்படுத்திக் கொண்டது. 1999ல் முதன்முறையாக தேர்தலை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் தனக்கான நண்பர்களையும், எதிரிகளையும் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அரசியலை தற்போது கைப்பற்றியுள்ளது. அதிகாரங்களை நோக்கி பயணிக்கை ஆரம்பித்துவிட்டது.
உண்மையில், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் 80, 90 களில் தமிழக அரசியலை ஆழம் பார்த்த சில கேள்விகளுக்கு மீண்டும் பதில் தேடத் தொடங்குவதாக அமைந்துள்ளது.