TN Fishermen Arrest: தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மேலும் 8 பேரை, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 8 பேரும் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் வடக்கு பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், மீன்பிடிக்க அவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கைதானவர்களை, காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய பிறகு, இலங்கை கடற்படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் என கூறப்படுகிறது. அண்மையில் கூட காரைக்காலைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படும் சம்பவம் மீனவ மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கைதாகி இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி, தமிழக மீனவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் மேலும் 8 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.