சினிமா குறித்து உதயநிதி சொன்னது நகைப்பாக உள்ளது என தவெக செய்தி தொடர்பாளர் லயோலா மணி தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து லயோலா மணி கூறுகையில், “சினிமா செய்தியை பார்ப்பதில்லை என ஒரு சினிமாக்காரர் சொல்லியிருப்பது நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாழ்க்கை என்று வரும்போது பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் நாகரீகமாக பேச வேண்டும் என எல்லோரும் விரும்புவார்கள் நாங்களும் விரும்புகிறோம். ஒரு ஜனநாயக பூர்வமான கருத்தை ஒரு தலைவர் முன் வைக்கின்ற போது அதற்கு ஏற்றார்போல் பதிலளிக்க வேண்டுமே தவிர, இது போன்று நகைச்சுவைக்கு உள்ளாக்குவதாக நினைத்து பேசி அவர்கள் நகைச்சுவையாக மாறியிருக்கிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டியுள்ளது. கூட்டணியை உடைக்க விஜய் வரவில்லை. ஆட்சி மாற்றத்திற்காக வந்திருக்கிறார். 2026 தேர்தல் களத்தை மக்களோடு தேர்தலை சந்திப்போம். 


சினிமா செய்தியை பார்ப்பதில்லை என ஒரு சினிமாக்காரர், சினிமா தயாரிப்பாளர், சினிமா விமர்சகர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் கூறுவது அதிர்ச்சியாகவும் நகைப்பாகவும் உள்ளது. அமரன் படத்தை குடும்பத்தோடு பார்த்தது யார் என்று சொல்ல முடியுமா உதய் அண்ணா?” என கேள்வி எழுப்பியுள்ளார். 


அதேபோல் காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் தளத்தில், ”உதயநிதி அவர்களே, நீங்கள் எந்த சினிமா செய்திகளையும் தமிழ்நாட்டுச் செய்திகளையும் இந்தியச் செய்திகளையும் உலக செய்திகளையும் பார்ப்பதில்லை. நீங்கள் சினிமா மட்டுமே பார்க்கிறீர்கள். அதைத்தான் நாங்களும் சொல்கிறோம், நீங்கள் தலைவராக இருக்க தகுதியற்றவர். வடிகால் நீர் குடிநீரில் கலந்ததால் காய்ச்சலும், நோய்களும் பரவுவதில்லை, என்றீர்கள். எங்கும் வெள்ளம் இல்லை தண்ணீர் தேங்கவில்லை என்று சொன்னீர்கள். சினிமா ஷூட்டிங் ராஜா வீட்டு கன்று போல அரசியல் செய்கிறீர்கள். நீங்கள் சினிமா கனவில் வாழ்கிறீர்கள். எந்த ஒரு பொது மக்களுக்கும் எந்த வகையிலும் பயன்படாது.
 
இன்று அவர்கள் உங்களை துரத்திவிட்டார்கள். நாளை மக்கள் உங்களை அனுமதிக்க மாட்டார்கள். இந்த அணுகுமுறையுடன் நீங்கள் ஒருபோதும் மக்களின் விருப்பமாக அல்லது மக்களின் தலைவர் இருக்க மாட்டீர்கள்
 
உதயநிதி எப்படி துணை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டாரா அல்லது தந்தையால் தேர்ந்தெடுக்கப்பட்டாரா? உங்கள் குடும்பம் தமிழக வரலாற்றை அழிக்கிறது. தமிழ்நாட்டுக்கு மிகப் பெரிய பாரம்பரியம் உண்டு, அதை ஒரே கோபாலபுரம் வீட்டில் அடைக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார். 


முன்னதாக தவெக தலைவர் விஜய் திமுகவையும் அவர்கள் கூட்டணி குறித்தும் சரமாரியாக சாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.