ஈரோடு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுதான் என அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளரை பொதுக்குழு முடிவு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்ட நிலையில், இன்று பொதுக்குழு உறுப்பினர்களிடையே தமிழ்மகன் உசேன் சார்பில் அளிக்கப்பட்டுள்ள படிவத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அறிவிக்கப்பட்ட தென்னரசு பெயர் மட்டும் இடம் பெற்றுள்ளது.
கடந்த ஜுலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போதைய சூழலில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க இயலாது என்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக பழனிசாமியின் கோரிக்கை குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் எனவும் நேற்று உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (பிப். 3ஆம் தேதி) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்க முடியாது என தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்தது. மேலும் இரட்டை இலை சின்னம் இதுவரை முடக்கப்படவில்லை எனவும், அதிமுக வழக்குகள் நிலுவையில் இருப்பதால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் கூறியது.
சரமாரி கேள்வி:
எனவே உச்சநீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை ஏற்கிறோம் என தேர்தல் ஆணையம் கூறிய நிலையில், அதனைப் பொறுத்தே உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசித்து திங்கட்கிழமை தெரிவிப்பதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. அதேசமயம் கட்சியின் சின்னம் குறித்து இதுவரை எந்த பிரச்சனையும் எழுப்பப்படவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
மேலும் பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ஒரு தரப்பை அங்கீகரிக்க முடியாது எனவும் கூறியது. இதற்கு பதிலளித்த ஓபிஎஸ் தரப்பு, கட்சியின் நலனை கருதியும், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட கூடாது என்பதற்காகவும் நிபந்தனையை ஏற்பதாக ஓபிஎஸ் தரப்பில் சொல்லப்பட்டது. எனவே அதிமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரின் வேட்புமனுவில் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்துப் போட தயார் என கூறப்பட்டது. உடனே வேட்புமனுவுடன் சமர்பிக்கப்படும் ஏ,பி படிவங்களில் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடுவாரா என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.
நீக்கவில்லை:
சமாதான பேச்சுக்கே இடமில்லை என சொன்ன இபிஎஸ் தரப்பிடம், நீதிமன்றம் கூறும் யோசனையை ஏற்காவிட்டால் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு இருதரப்பும் ஏன் ஒரு முடிவுக்கு வரக்கூடாது என்றும், இருதரப்பும் கையெழுத்திடாமல் பொதுவான ஒருவரை பொதுக்குழு சார்பில் கையெழுத்திட அனுமதித்தால் என்ன? எனவும் நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். மேலும் இடைத்தேர்தல் வேட்பாளரை இறுதி செய்ய மட்டும் பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகிய 3 பேரையும் கட்சியில் இருந்து நீக்கப்படவில்லை என கருத வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதனிடையே ஓபிஎஸ், இபிஎஸ், தேர்தல் ஆணையம் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், பொதுக்குழு கூடி வேட்பாளரை முடிவு செய்யுமென்றும், பொதுக்குழுவின் முடிவை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். மேலும் அவைத்தலைவரின் பரிந்துரையின் பேரில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் எனவும், பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரையும் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.