அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.4,000 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். முன்னதாக, அறநிலையத்துறையின் செயல்பாடு குறித்து பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக சேகர் பாபு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.


சேகர் பாபு ஆய்வு:


சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் சி.எம்.டி.ஏ. சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் மற்றும் காய்கறி சந்தையில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.  பின்பு வியாபாரிகளிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த சேகர்பாபு,  ”சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் கடந்த மாதம் 8ம் தேதி மலர்கள் அங்காடியில் ஆய்வு மேற்கொண்டு வியாபரிகள் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினோம். அதனை தொடர்ந்து இன்று காய்கறி சந்தைகள் உள்ள 1985 கடைகள் அமைந்துள்ள பகுதியில் ஆய்வு மேற்கொண்டோம். 


குப்பைகளை அகற்ற கோரிக்கை:


குப்பைகள் அகற்ற காலதாமதம் ஏற்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு நாளில் 2 முறை குப்பைகள் அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர். சர்வீஸ் சாலைகள் அசுத்தமாக பயன்படுத்த முடியாமல் உள்ளது. அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


கோயம்பேடு காய்கறி சந்தையில் சேதமடைந்த இடங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்தமுள்ள 3941 கடைகள் வெளிநாடுகளில் உள்ள மார்கெட்டுகள் போல் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்தடுத்து பழங்கள் அங்காடி, உணவு தானிய அங்காடி, பேருந்து நிறுத்தம் போன்ற பகுதியில் ஆய்வு மேற்கொண்டு கோயம்பேடு காய்கறி மார்கெட் பகுதி பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். 


8 ஏக்கரில் பூங்கா:


கோயம்பேடு வளாகத்தில் 8 ஏக்கர் அளவில் பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும். கோயம்பேடு சந்தையில் சேகரிக்கப்படும் காய்கறி கழிவுகளை சென்னை மாநகராட்சி சார்பில் சேத்துப்பட்டில் உள்ள பயோ கேஸ் ஆலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். கோயம்பேடு சந்தையில் பயோ கேஸ் ஆக அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும். 


கழிவறைகள் சுத்தம் செய்யப்படும்:


அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கோயம்பேடு காய்கறி சந்தை பகுதியில் கழிவறைகள் ஒரு வார காலத்திற்குள் முழுமையாக சுத்தம் செய்யப்படும். போக்குவரத்து நெரிசல் பிரச்சனை சரி செய்யப்படும், விழா காலங்களில் கூடுதலாக காவலர்கள் நியமிக்கப்படும்” என, அமைச்சர் சேகர் பாபு உறுதியளித்தார்.


ரூ.4,000 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்பு:


மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சட்டவிரோதமாக நீண்ட காலமாக குத்தகைக்கு விடப்பட்டிருக்கும் ஆதீனங்களின் சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர்பாபு,  திருச்செந்தூரில் கூட சமீபத்தில் ஆதீனத்தின் நிலங்களை மீட்க நாங்களும் ஒத்துழைப்பு தந்திருந்தோம். ஆதீனங்களும் இடங்களை அடையாளம் காட்டினால் அதனை மீட்பதற்கு இந்து சமய அறநிலைத்துறை உறுதுணையாக இருக்கும். இந்த ஆட்சியில் தான் வேறு எந்த ஆட்சியிலும் இல்லாத அளவிற்கு 4000 கோடி அளவில் சொத்துக்களை, இந்து சமய அறநிலையத்துறை மீட்டுள்ளது எனவும் கூறினார்.