கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து  தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆறுதல் கூறி வருகிறார். 






இதுவரை 42 பேர் உயிரிழப்பு: 


கள்ளக்குறிச்சியில் நேற்று முதல் அடுத்தடுத்து கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போது வரை இந்த கள்ளச்சாராயம் குடித்து 42 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உயிரிழப்பு அதிகரிக்கும் என்ற அச்சமும் நிலவி வருகிறது. தொடர்ந்து, கள்ளக்குறிச்சி, சேலம், ஜிப்மர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் பலரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். 


இந்தநிலையில், கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் கள்ளக்குறிச்சி புறப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 


அரசுக்கு எதிராக குரல் கொடுத்த நடிகர் விஜய்: 


முன்னதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசை குற்றம் சாட்டி பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.






கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.