கள்ளக்குறிச்சியில் தொடரும் விஷச்சாராயம் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி பகுதியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்ததில் இதுவரை 132 நபர்கள் பாதிப்படைந்துள்ளனர். தற்பொழுது 95 நபர்கள் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை விஷச்சாராயம் குடித்து 37 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 46 பேரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 17 பேரும், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 31 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் ஒருவர் என 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 22 பேரும், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மூன்று பேரும், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 08 பேரும், விழுப்புரம் மருத்துவமனையில் நான்கு பேரும் மொத்தம் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்
முதல் உயிரிழப்பு நடந்தது எப்பொழுது ?
செவ்வாய்க்கிழமை ஜூன் 18ஆம் தேதி, நள்ளிரவு 11 மணிக்கு பிரவீன் என்பவர் விஷச்சாராயம் குடித்ததாக தெரிகிறது. இதையடுத்து நேற்று காலை (ஜூன் 19ஆம் தேதி) ஒரு மணி அளவில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பிரவினை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனையில் மது அருந்தி இருப்பதால் சிகிச்சை அளிக்க முடியாது என கூறி பிரவினை வீட்டிற்கு மருத்துவர்கள் திருப்பி அனுப்பியதாக உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
அதிகாலை 2 மணி அளவில் பிரவீன் உறவினர் சுரேஷ் என்பவர் விஷச்சாராயம் குடித்துள்ளார். அதிகாலையிலும் கள்ளக்குறிச்சி பகுதியில் விஷச்சாராயம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஜூன் 19ஆம் தேதி காலை 4 மணியளவில் சுரேஷுக்கு வயிற்று வலி மற்றும் பார்வை குறைபாடு ஏற்பட துவங்கியுள்ளது. உடல் வலியால் துடி துடித்த சுரேஷை மீட்டு உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். இம்முறை சுரேஷ் அதிகாலை 5:30 மணி அளவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கு சுரேஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் 7 மணி அளவில் சுரேஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் அழைக்கிறார்.
தொடர்ந்த உயிரிழப்பு
தொடர்ந்து நேற்று காலை மீண்டும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரவீன், காலை 8 மணி அளவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பிரவீன் உயிரிழக்கிறார். விஷச்சாராயம் குடித்ததால் தான் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். இதுகுறித்து ஊடகங்களில் செய்தியில் வெளி வருகின்றன. ஆனால் அதை மாவட்ட ஆட்சியர் மறுக்கிறார். உயிரிழப்புக்கு விஷச்சாராயம் காரணம் கிடையாது என மாவட்ட நிர்வாகமும் விளக்கம் அளிக்கிறது.
இந்தநிலையில் பிரவீன் மற்றும் சுரேஷ் ஆகிய உயிரிழப்புக்கு வந்த ஒரு சிலரும் விஷச்சாராயத்தை குறிக்கின்றனர். அப்படி உயிரிழப்புக்கு வந்து விஷ சாராயத்தை குடித்த மூன்று பேர் உயிரிழந்ததாகவும், இன்னும் சிலர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷச்சாராயத்தால் உயிரிழப்பு நடைபெறவில்லை என மாவட்ட நிர்வாகம் அறிவித்ததாலே தொடர்ந்து அங்கே இருந்த கிராம மக்களும் விஷச்சாராயத்தை குடித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்பொழுதே அதை தடுத்து நிறுத்தி இருந்தால் , இவ்வளவு உயிர் இழப்புகள் நடந்திருக்காது என பிரவீன் மற்றும் சுரேஷின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அப்பொழுது தீவிர விசாரணை நடத்தி மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியிருந்தால் உயிரிழப்புகள் குறைந்திருக்கலாம் என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
குற்றச்சாட்டு எழுந்த பின்னும் விற்பனையான சாராயம்
குற்றச்சாட்டு எழுந்த பிறகும் பல்வேறு இடங்களில் சாராயம் விற்கப்பட்டு வந்துள்ளது. இதனால் உயிரிழப்புக்கு வந்தவர்கள் ஒரு சிலரும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் தொடர்ந்து விஷ சாராயத்தை குடிக்க அவர்களுக்கு பின் விளைவுகள் ஏற்பட துவங்கியுள்ளது. இதனை அடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை பரபரப்பாகியுள்ளது. தொடர்ந்து கொத்துக்கொத்தாக தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகின்றனர். நிலைமை மோசமாக இருப்பவர்கள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்கள். இதனைத் தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.