தமிழக வெற்றிக் கழகம்


நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்.2-ம் தேதி தொடங்கினார். கட்சி தொடங்கியதில் இருந்து உறுப்பினர் சேர்க்கை, மாநில நிர்வாகிகள் நியமனம், கட்சி கொடி, பாடல் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்த அவர், பிரம்மாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிட்டிருந்தார். அதன்படி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலை என்ற கிராமத்தில் 85 ஏக்கர் நிலத்தை மாநாடு நடத்துவதற்கு அக்கட்சியினர் தேர்வு செய்தனர்.


இதையடுத்து, கடந்த ஆக.27-ம் தேதி விழுப்புரம் மாவட்ட காவல் துறையிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த், மாநாடு நடத்துவதற்கு அனுமதி கோரி மனு அளித்தார். ஆனாலும், காவல்துறை அனுமதி வழங்குவதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டது. குறிப்பாக, மாநாடு தொடர்பாக 21 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு காவல் துறை கூறியது. அதற்கு கட்சி சார்பாக விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், மாநாடு நடத்த காவல் துறை அனுமதி வழங்கியது.


இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாடு அக்.27-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.


வி.சாலையில் தமிழக வெற்றிக் கழக மாநாடு


தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு 27 ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் 85 ஏக்கர் பரப்பளவில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணிகளில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை மாநாட்டின் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.


நடிகர் விஜய் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என ஒற்றை குறிக்கோளுடன் நகர்ந்து வருவதாக தெரிகிறது. கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு, பல்வேறு குழுக்களை அமைத்து விஜய் கண்காணித்து வருகிறார்.


மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் மாநாட்டு ஏற்பாடுகள் இரவு பகலாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டு வாயில் முகப்பிலிருந்து மாநாட்டு திடல் வரை வழியில் இருபுறமும் 35 அடி உயரத்தில் கொடி கம்பம் நடப்பட்டு அதில் 15 அடி உயரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பறக்க விடப்பட்டுள்ளது.


 1 மணி முதல் 3 மணிக்குள் மாநாட்டுக்கு வந்துவிட வேண்டும்


மாநாட்டு திடலில் தொண்டர்கள் மாவட்ட வாரியாக ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக வரவுள்ள வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு, வாகனங்களுக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது. பிற்பகல் 1 மணி முதல் 3 மணிக்குள் மாநாட்டுக்கு வருபவர்கள் வந்துவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மாநாட்டுத் திடலின் மேடை அருகே பெரியார், காமராஜ், அம்பேத்கர் மற்றும் விஜய் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட தியாகிகளான வேலுநாச்சியார், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஞ்சலை அம்மாள், சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் படங்களும் இடம்பெறஉள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.


அதிக மின் திறன் கொண்ட 60 ஜெனரேட்டர்கள்


மாநாட்டு திடலில் மின்சார கம்பிகள் தாழ்வாக சென்ற நிலையில் மின்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மாநாட்டு திடலுக்கு மேலே தாழ்வாக சென்ற மின் கம்பிகள் இழுத்து கட்டப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறும் நாளில் மின்தடை இல்லாமல் இருப்பதற்கு அதிக பவர் கொண்ட 60 ஜெனரேட்டர்கள் மூலம் மாநாட்டிற்கு தேவையான மின்சாரத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மாநாடு அழைப்பிதழ் இல்லை


 தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு அழைப்பிதழ் இன்னும் வெளியாகவில்லை. இது தொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் கேட்டபோது மாநாட்டுக்கு அழைப்பிதழ் என தனியாக அச்சடிக்கப்பட்டதாக தெரியவில்லை . யார் யார் பங்கேற்பார்கள் என்பது எங்களுக்கும் தெரியவில்லை. எல்லாமே ரகசியமாகவே உள்ளது.  மேலும் தலைவர் விஜய் மாநாடு மேடைக்கு வருவதற்கு 4 வழிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.