அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் 1,500 பேருக்கு அவர்கள் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை மாதம் ரூ.1,500 வழங்க வகை செய்யும் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் தெரிவித்துள்ளது.


அக்டோபர் 1ஆம் தேதி அன்று தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வு அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.




பள்ளி மாணவ, மாணவியர்களின்‌ அறிவியல்‌, கணிதம்‌, சார்ந்த ஒலிம்பியாடு தேர்வுகளுக்கு பெருமளவில்‌ தயாராகி பங்கு பெறுவதைப்‌ போன்று தமிழ்‌ மொழி இலக்கியத்‌ திறனை மாணவர்கள்‌ மேம்படுத்திக்‌ கொள்ளும்‌ வகையில்‌ 2022- 2023 ஆம்‌ கல்வியாண்டு முதல்‌ தமிழ்‌ மொழி இலக்கியத்‌ திறனறிவுத்‌ தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில்‌ 1,500 மாணவர்கள்‌ தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக்‌ கல்வித்‌ துறை வழியாக மாதம்‌ ரூ.1500/- வீதம்‌ இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்‌. 

 










தமிழ்நாடு அரசின்‌ 10-ஆம்‌ வகுப்புத் தர நிலையில்‌ உள்ள தமிழ்‌ பாடத்திட்டங்களின்‌ அடிப்படையில்‌ கொள்குறி வகையில்‌ தேர்வு நடத்தப்படும்‌. அனைத்து மாவட்டங்களிலும்‌ மாவட்டத்‌ தலைநகரங்களில்‌ இத்தேர்வு நடத்தப்படும்‌.




அக்டோபர் 15 அன்று தேர்வு


2022- 2023ஆம்‌ கல்வியாண்டில்‌ தமிழகத்தில்‌ உள்ள அங்கீகாரம்‌ பெற்ற அனைத்து வகைப் பள்ளிகளில்‌ பயிலும்‌ (CBSE / ICSE உட்பட) பதினொன்றாம்‌ வகுப்பு மாணவர்களுக்கு, 01.10.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறுவதாக இருந்தது.


இத்தேர்விற்கு மாணவர்கள்‌ தாங்கள்‌ பயிலும்‌ பள்ளியின்‌ வாயிலாக மட்டுமே விண்ணப்பித்து வந்தனர். குறிப்பாக இந்தத் தேர்வுக்கு மாணவர்கள் 22.08.2022 முதல்‌ 09.09.2022 வரை பதிவிறக்கம்‌ செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன்‌ தேர்வுக்‌ கட்டணத்‌ தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித்‌ தலைமையாசிரியரிடம்‌ ஒப்படைத்தனர். 


இந்நிலையில் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம் தெரிவித்துள்ளது. 


கூடுதல் விவரங்களுக்கு: https://www.dge.tn.gov.in/


Also Read: TNPSC : தமிழ்நாடு சிறைப் பணிகள்.. காலி பணியிடங்கள் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?


Also Read: TNCSC: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு; 8-ஆம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்