கோவையில் 216 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் கோவை சீரநாயக்கன்பாளையம் பிரதான சாலையில் உள்ள வீரபத்திர சாமி கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஆர் எஸ் புரம் போலீசார், அதிவேகமாக வந்த காரை வழிமறித்து சோதனையிட்டனர். அந்தக காரில் 216 கிலோ கஞ்சாவும், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. காரில் இருந்த இருளாண்டி, தர்மர், பந்தீஸ்வரன், சதீஷ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த கோவை போதை பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், நான்கு பேருக்கும் தலா பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து 2019 ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது. தண்டனை எதிர்த்து இருளாண்டி உள்ளிட்ட நான்கு பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, வழக்கில் சாட்சியங்களில் முன்னுக்குப் பின் முரண்பாடுகள் உள்ளதாகவும், விசாரணை நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்பதாலும் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அனைத்து நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 216 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட இந்த வழக்கில் சாட்சியங்களில் உள்ள சிறு முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி, வழக்கு நிரூபிக்கப்படவில்லை என கூற முடியாது என தெரிவித்து, நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து, மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.
மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக பேராசியர் மீது புகார்
மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக சென்னை பல்கலைக்கழக பேராசியருக்கு எதிராக புகார் அளித்த பேராசிரியை மீது வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் ஆர். ராதாகிருஷ்ணன் என்பவர், மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாகவும், மாந்திரீகங்கள் செய்வதாகவும் கூறி மற்றொரு பேராசிரியையான ரீட்டாஜான் என்பவர், பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து, பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் தனக்கு எதிராக புகார் அளித்துள்ளதாகவும், பல்கலைக்கழகம் தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத நிலையில் பொய் புகார் அளித்த பேராசிரியை ரீட்டா ஜானுக்கு எதிராக வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யக் கோரி ராதாகிருஷ்ணன், சென்னை அமர்வு நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை முறையாக விசாரிக்காமல் தள்ளுபடி செய்து விட்டதாக கூறி, பேராசிரியை ரீட்டாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடக் கோரி ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், மாந்திரீகம் செய்வதாகவும் துறை தலைவர் என்ற முறையில் பேராசிரியை ரீட்டா புகார் அளித்தது வன்கொடுமை தடைச் சட்டப்படி குற்றமாகாது என்பதால், அவர் வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட முடியாது எனக் கூறி, பேராசிரியர் ராதாகிருஷ்ணனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.