தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழையே அதிரடியாக தொடங்கியுள்ளது. அந்த வகையில் இரண்டு வாரங்களில் அடுத்தடுத்து புயல் சினங்கள் உருவாகி பரவலாக மழை பெய்தது. வங்க கடலில் உருவான மோன்தா புயல் முதலில் தமிழகத்தை நோக்கி வந்த நிலையில் திடீரென திசை மாறி விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது. இருந்த போதும் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிலும் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலைய மையம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் மழை
நாளை தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே வட கிழக்கு பருவமழை நவம்பர் மாதம் மத்தியில் தீவிரம் அடைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஏற்றார் போல வங்க கடல் பகுதியில் புதிய புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தனியார் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இது தொடர்பாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், இன்று முதல் தென் தமிழகத்தில் மழை பெய்ய ஆரம்பிக்கும் எனவும், அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதே நேரம் வட தமிழகத்தில் லேசான மழையை தவிர்த்து வானிலை வறண்டு காணப்படும் என கூறியுள்ளார்.
நவம்பர் 4வது வாரம் புயல்.?
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மீண்டும் மழைக்கு இடைவெளி உருவாகவுள்ளதாகவும், இந்த மாவட்டங்களில் வருகிற நவம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் நல்ல மழை பெய்யும் என குறிப்பிட்டுள்ளார். இந்த இடைப்பட்ட நாட்களில் மிதமாக மழைக்கே வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். அதே நேரம் நவம்பர் 4வது வாரம் புயல் வளைகுடா பகுதியில் உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட் விடுத்துள்ளார். இந்த புயலின் நிலை வரும் நாட்களில் தான் எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவரும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்.