சென்னை: தமிழகத்தில் ரேஷன் கார்டில் மாற்றங்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என புதிய கட்டுபாடுகள் வந்துள்ள நிலையில் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

ரேஷன் கார்டில் மாற்றங்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

மகளிர் உரிமை தொகை பெறுவதற்காக புதிய ரேஷன் கார்டு கேட்டுக் கொண்டு பலரும் விண்ணப்பித்து வரும் நிலையில், ரேஷன் கார்டில் உறுப்பினர் நீக்கம் உள்ளிட்ட மாற்றங்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்ற உணவு வழங்கல் துறையின் புதிய உத்தரவுக்கு பொதுமக்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மகளிர் உரிமை தொகை பயனாளிகள் தேர்வு 

மகளிர் உரிமை தொகை பயனாளிகள் தேர்வுக்காக 2023 மே மாதம் வரை மாதந்தோறும் சராசரியாக 40,000 முதல் 50,000 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 25,000 முதல் 30,000 வரை புதிய ரேஷன் கார்டுகள் மட்டுமே வழங்கப்பட்டன. 2023 செப்டம்பர் மாதம் முதல் மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக அனைத்து கார்டுதாரர்களுடைய வீடுகளுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, நிபந்தனைகள் பூர்த்தி செய்தவர்களே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

Continues below advertisement

புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதில் சிக்கல் 

இதன் பின்னணியில் புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பங்கள் பெருமளவில் அதிகரித்தன. இதனால், புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதிலும், ஏற்கனவே உள்ள கார்டுகளில் இருந்து உறுப்பினர்களை நீக்குவதிலும் துறையினர் கடுமையான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால், மாதந் தோறும் சராசரியாக 25,000 பேர் விண்ணப்பித்தாலும், 5,000 பேருக்கு மட்டுமே புதிய ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது.

இனி ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே ரேஷன் கார்டு திருத்தம் செய்ய முடியும் 

முன்னர், ரேஷன் கார்டில் உறுப்பினர் சேர்த்தல், முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் மாற்றம், உறுப்பினர் நீக்கம் போன்ற சேவைகளுக்கு பொதுவினியோக திட்ட இணையதளம் வழியாக எந்த நேரத்திலும் விண்ணப்பிக்கலாம் என்ற வசதி இருந்தது. ஆனால் தற்போது, ஜனவரி முதல் ஜூன் வரை ஒரு முறையும், ஜூலை முதல் டிசம்பர் வரை ஒரு முறையும் என ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே இந்த சேவைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என உணவு வழங்கல் துறை அறிவித்துள்ளது. இதனால் இது புதிய ரேஷன் கார்டுகளுக்கான கட்டுப்பாடா என்ற சந்தேகம் கார்டுதாரர்களிடம் எழுந்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் சடகோபன் தெரிவித்துள்ளார்:

"ரேஷன் கார்டு என்பது மக்கள் அத்தியாவசிய ஆவணம். வேலை, கல்வி போன்ற காரணங்களால் பலர் அடிக்கடி முகவரி மாற்றம் செய்கின்றனர். திருமணம் ஆனவர்கள் தனி குடும்பமாக செல்லும்போது பெயர் நீக்கம் அவசியம். இத்தகைய அத்தியாவசிய சேவைக்கு ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்ற கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்வது சிரமம்,” என்றார்.

இதுகுறித்து உணவுத்துறை அதிகாரி கூறுகையில், “சிலர் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஆண்டுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட முறை முகவரி மாற்றம் போன்ற சேவைகளுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். அதைத் தடுக்கவே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டது,” என தெரிவித்தார்.

தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கார்டில் மாற்றங்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என புதிய கட்டுபாடுகள் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.