டிடிவிக்கு பதிலடி கொடுத்த ஆர்.பி.உதயகுமார்
தமிழகத்தில் திமுக- தவெக இடையே தான் போட்டி, அதிமுக 3வது இடத்திற்கு சென்று விடும், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை வீழ்ச்சி பாதைக்கு கொண்டு செல்கிறார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக நிர்வாகியும், சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அம்மா அவர்களால் நீக்கி வைக்கப்பட்டவர், அடிப்படை உறுப்பினரிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர் தான் TTV தினகரன், அதிமுக தொடர்பாக தற்போது தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு கட்சியையும், ஆட்சியையும் அபகரிக்க திட்டம் தீட்டினார் இது தான் உண்மை, கொச்சையாக சொல்ல வேண்டுமானால் அதிமுகவை ஆட்டைய போட பார்த்தார், அது நடைபெறவில்லை, டிடிவி தினகரனின் பருப்பு எடப்பாடி பழனிசாமியிடம் வேகவில்லை. அந்த விரக்தியின் வெளிப்பாடாக, வேதனையின் வெளிப்பாடாக அதிமுகவை விமர்சித்து வருகிறார். ஆனால் எந்தவித சத்தமும் இல்லாமல் 4.5 ஆண்டு காலம் ஒரு தொண்டர் நாடாள முடியுமா என்ற ஒரு புதிய இலக்கணத்தை படைத்தவர் தான் எடப்பாடி பழனிசாமி,
டிடிவிக்கு மனநிலை பாதிப்பா- ஆர்.பி.உதயகுமார்
உனக்கென்னப்பா பைத்தியம் என்னவேண்டுமானாலும் பேசலாம் என்று கிராமங்களில் பேசுவார்கள்.அது போல தான் டிடிவி தினகரனின் பேச்சும் உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதிமுகவில் இருந்து டிடிவி தினகரனை 10 ஆண்டுகள் நீக்கி வைத்திருந்ததால் அவருக்கு மனநலம் பாதித்துவிட்டதோ என்ற கவலை எங்களுக்கு எழுந்துள்ளது. தம்பிமார்களாக ஆனா நாங்கள், அண்ணன் டிடிவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு பொது வாழ்க்கையில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டு விட்டதோ என்கின்ற மிகப்பெரிய கவலை எங்களைப்போல தம்பிமார்களுக்கு ஏற்பட்டுள்ளது.
கொடநாடு வழக்கு பற்றி டிடிவி தினகரன் பேசுகிறார், தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்த போது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அது குறித்து சட்டமன்றத்தில் நீண்ட விவதாம் நடத்தப்பட்டு அவைக்குறிப்பில் உள்ளது. ஆனால் டிடிவி தினரகன் சட்டசபைக்கு வந்ததில்லை. வந்தால் தானே தெரியும். நானும் ரவுடி, நானும் ரவுடி என வடிவேல் கூறுவது போல் சிம்ம சொப்பனமாக இருக்கிறாராம் டிடிவி தினகரன். யாருக்கு தான் தெரியவில்லை. ஆனால் இன்று மக்கள் மன்றத்திலும், சட்ட மன்றத்திலும் சிம்ம சொப்பனமாக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி, தனக்கு தானே பட்டம் சூட்டிக்கொள்ளும் 23ஆம் புலிகேசி நிலைக்கு டிடிவி தினகரன் சென்று விட்டார்.
டிடிவிக்கு சவால் விடுத்த ஆர்.பி.உதயகுமார்
ஒரு காலத்தில் டிடிவி தினகரன் செல்வாக்காக இருந்தார், இதனை நாங்கள் மறுக்கவில்லை, ஆனால் இன்று செல்வாக்கை இழந்து, பதவியை இழந்து, அடையாளத்தை இழந்து, ஆதரவை இழந்து, அரசியலில் அடிப்படை பண்புகளை எல்லாம் இன்று காற்றில் பறக்கவிட்டு அடாவடி அரசியலில் வனமத்தை வைத்து கொண்டு டிடிவி தினகரன் செயல்படுகிறார். நான் ஒரு சவால் விடுகிறேன், ஒரு மாதம் பேட்டி கொடுக்காமல் அமைதியாக இருந்தால் மக்கள் அவரை நினைப்பார்களா.? மறந்து விடுவார்களா.?என்பதை பார்க்கலாம். தனது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்காகவே பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்துகிறார். மக்களுக்கு சேவை செய்வதற்காக நடத்தவில்லை என ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்தார்.