மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் கைகோர்த்து உதவ வேண்டும் என நடிகர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார். 


கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால், சென்னை முழுவதும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்கள் அன்றாட வேலைகளை செய்யவும், அத்தியாவசியமான பொருட்களை வாங்கவும் மிகவும் கஷ்டப்பட்டனர். இதையடுத்து, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் தண்ணீர் நிரம்பி இருக்கும் பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு சில பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கைக்கு திரும்பினாலும், இன்னும் சில பகுதிகளில் கழுத்து அளவு தண்ணீரில் மக்கள் தத்தளித்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது நிதர்சனம். மடிப்பாக்கம், வேளச்சேரி பகுதிகளில் தெருக்களில் நிரம்பி இருக்கும் தண்ணீர் இன்னும் வடியாததால் பெருவாரியான மக்கள் இன்னும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சூழல் நிலவி வருகிறது. இதையடுத்து, அவர்களுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு பொருட்களும், தண்ணீரும் வழங்கப்பட்டு வருகிறது.


சென்னை மாநகராட்சி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இன்னும் முழுவீச்சில் செயல்படவில்லை என்பதையே பாதிக்கப்பட்ட மக்கள் கூறி வருகின்றனர். இன்னும் எத்தனையோ இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி நின்று வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த புயல் பாதிப்பில் இருந்து மீள முடியாத சூழலில்தான் இருந்து வருகிறார்கள்.


இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள்  பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன.





வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன. 


இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.


#கைகோர்ப்போம் துயர்துடைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.