சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை, இன்று ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.


மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தகவலை கேட்டறிந்தார்.


மத்திய அரசின் பிரதிநிதியாக தமிழ்நாடு வருகை தந்த ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். வெள்ளம் பாதித்த பகுதிகளை வான்வழியாக ஆய்வு செய்தபின், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். 






ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு: 


ஹெலிகாப்டன் மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வான்வழிப் பயணம் மேற்கொண்டபோது, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா ஆகியோர் உடன் சென்றனர். 


அதன்பிறகு, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை ராஜ்நாத் சிங் சந்தித்தார். தொடர்ந்து, மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட பேரழிவுகள் மற்றும் அரசு மேற்கொண்ட நிவாரணப் பணிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. விளக்கக்காட்சிக்குப் பிறகு, அவர் டெல்லிக்கு புறப்படுகிறார். 






முன்னதாக, மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்புமாறு பிரதமரிடம் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். 5,060 கோடி ரூபாய் இடைக்கால நிவாரண நிதியாக உடனடியாக வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியதை அடுத்த இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 


ராஜ்நாத் சிங்குடன் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், “சென்னை மக்கள் மீண்டு இயல்பு நிலைக்கு வர தொடங்கி இருக்கிறார்கள். இந்த பெரும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தன்னார்வாலர்கள் அனைவரும் இணைந்து களப்பணி ஆற்றி வருகிறார்கள். தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரிய அளவிலான பொருட்செலவு, உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. சாலைகள், பொது கட்டிடங்கள் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்தவற்கும், நிவாரண உதவிகளை வழங்குவதற்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து 5,060 கோடி வழங்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை கருத்தில்கொண்டு முதற்கட்டமாக இன்று 460 கோடி மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.