வங்கக் கடலில் கடந்த 9-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, நேற்று காலை தென்மேற்கு வங்கக் கடலில் நிலவியது. இது மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, சென்னைக்கு அருகே நேற்று மாலை 5.30 மணி அளவில் கரையை கடக்கத் தொடங்கியது. சுமார் 1 மணி நேரத்தில் கரையை கடந்தது. பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலு குறைந்து மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்றது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக இன்று வலுவிழக்கும் நிலையில், சென்னையில் காற்றுக்கான ரெட் அலர்ட் மட்டும் நீடிக்கப்படுவதாகவும், மழை படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், நாளை (13-ந் தேதி) அந்தமான் மற்றும் அதையொட்டிய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அது உருவான அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சனிக்கிழமை முதல் கொட்டித் தீர்த்து வரும் மழைநீர் சாலைகளில் தேங்கியும், வயல்களை மூழ்கடித்தும் உள்ளதால் வேதனையில் உள்ள மக்கள் மீண்டும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளதால் மிகுந்த வேதனைக்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக, சென்னை மக்கள் ஏற்கனவே வெள்ளத்தில் மிதந்து வரும் நிலையில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்ற அறிவிப்பால் பீதியில் உறைந்துள்ளனர்.
முன்னதாக, ஏற்கனவே உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலையில் இருந்தே பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. சென்னையின் பிரதான சாலைகளில் ஏற்கனவே மழைநீர் வௌ்ளம்போல சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்துள்ளனர்.
முக்கிய சுரங்கப்பாதைகளான ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை, தி.நகர் அரங்கநாதன் சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, வியாசர்பாடியில் உள்ள 2 சுரங்கப்பாதைகள், பல்லாவரம், தாம்பரம் சுரங்கப்பாதை மழைநீரிங் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது,. இன்று காலை அரங்கநாதன் சுரங்கப்பாதையில் சென்ற பேருந்து மழைநீரில் சிக்கியதால் பயணிகள் படகுககள் மூலமாக மீட்கப்பட்டனர்.
கொளத்தூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, எண்ணூர் மீனவ பகுதிகள், மயிலாப்பூர், அரும்பாக்கம், கே.கே.நகர். கோயபம்பேடு என 500க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அவற்றை சரி செய்யும் பணியில் மின்வாரிய பணியாளர்களும், மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்களும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்