வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே நேற்று கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதன் தாக்கத்தால் இன்று மற்றும் நாளை நீலகிரி, கோவை, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவித்தது.  இந்நிலையில் 3 நாட்களாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர்  பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் பெரும்பாக்கம் பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. குடியிருப்பு பகுதியில் ஆறுபோல் தேங்கி நிற்கும் தண்ணீரை சுட்டிக்காட்டும் நபர் ஒருவர் ஆட்சி மாறலாம். காட்சி மாறாது எனக் குறிப்பிட்டுள்ளார்.


மழை நீர் வெளியேற்றப்படும் பாதைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், பெரும்பாக்கம் காந்திநகர் சொசைட்டி குடியிருப்பில் வாழும் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். 


 






Casagrande First City போன்ற ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி, இப்பகுதியில் உள்ள நீர்வழித்தடங்கள் முறையாக பக்கிங்ஹாம் கால்வாயில் சேரும் வகையில், தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.






 


 


சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னைக்கு விடப்பட்டிருந்த அதிகனமழைக்கான ரெட் அலர்ட் நேற்று விலக்கிக் கொள்ளப்பட்டது. வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி கடந்த அக்டோபர் 1 முதல் நவம்பர் 11-ந் தேதி வரை வழக்கமாக் 26 செ.மீ. மழை கிடைக்கும். ஆனால், இந்தாண்வு 40 செ.மீ. மழை கிடைத்துள்ளது. இது வழக்கத்தைவிட 54 சதவீதம் அதிகம்.


சென்னையில் இந்த காலகட்டத்தில் வழக்கமாக 42 செ.மீ. மழை பெய்யும். இந்தாண்டு 74 செ.மீ. மழை கிடைத்துள்ளது.இது வழக்கத்தைவிட 77 சதவீதம் அதிகமாகும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலையில் இருந்தே பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. நேற்று காலை நிலவரப்படி 3 இடங்களில் அதிகனமழையும், 23 இடங்களில் மிக கனமழையும், 21 இடங்களில் கனமழையும் பெய்தது. இன்று  கனமழை அபாயம் உள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள 10 மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


குறிப்பாக, தலைநகர் சென்னையில் தி.நகர், கொளத்தூர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம், அமைந்தகரை, அரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம்போல சூழ்ந்துள்ளது. இதனால், பல பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்துள்ளது.