தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு திருத்த பணி
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளது. அதே நேரம் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு திருத்த பணியானது தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வீடு வீடாக சென்று விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டும் வருகிறது. மேலும் விண்ணப்ப படிவம் கிடைக்காதவர்கள் தாங்கள் வாக்களிக்கும் வாக்குசாவடி அல்லது BLO விடம் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கி வருகிறார்கள். தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளுக்கான விண்ணப்பங்களை வழங்க கால அவகாசம் வரும் 11 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
77 லட்சம் வாக்காளர் நீக்கம்
இந்த நிலையில் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் மூலமாக 40 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் தற்போதைய நிலவரப்படி 25 லட்சத்து 72 ஆயிரம் பேர் இறந்தவர்களின் பெயர் கண்டறியப்பட்டுள்ளது.சுமார் 9 லட்சம் பேர் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.39 லட்சம் பேர் நிரந்தரமாக இருப்பிடம் மாறியவர்கள் எனவும், அதோடு தமிழகத்தில் 3 லட்சத்து 32 ஆயிரம் பேர் இரட்டைப் பதிவு வாக்காளர்களாக இருப்பதையும் இந்திய தேர்தல் ஆணையம் கண்டறிந்துள்ளது. எனவே ஒட்டுமொத்தமாக 77 லட்சம் வாக்காளர் பெயர்கள் பட்டியில் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி இறந்தவர்கள் மற்றும் இரட்டை வாக்குப்பதிவாளர்களை நீக்குவதன் அடிப்படையில் சுமார் 28 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவது உறுதியாகியுள்ளது. தொடர்பு கொள்ளவே முடியாத நிலையில் இருக்கும் சுமார் 9 லட்சம் பேர் வரும் 11 ஆம் தேதிக்குள்ளாக தங்களின் விண்ணப்ப படிவங்களை வழங்கவில்லை எனில் அவர்களின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது.அதே நேரம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின்னர் அதில் இடம்பெறாதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையம் விளக்கம்
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது நடைபெற்றுவரும் கணக்கீட்டு காலம் 11.12.2025 அன்றுடன் நிறைவடையும். வரைவு வாக்காளர் பட்டியலானது இதுவரையில் இறுதி செய்யப்படவில்லை. வரைவு வாக்காளர் பட்டியலானது சிறப்புத் தீவிர திருத்தப்பணி கால அட்டவணைப்படி நிர்ணயிக்கப்பட்ட தேதியான 16.12.2025 வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பெயர்கள் விடுபட்டவர்கள் டிசம்பர் 12ஆம் தேதி முதல் ஜனவர் 1ஆம் தேதி வரை வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல் அல்லது ஏற்கனவே உள்ள பதிவுகள் குறித்து மறுப்பு தெரிவிக்கலாம். எந்த ஒரு தகுதியான குடிமகனும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாமல், எந்த ஒரு தகுதியற்றவரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாத அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களும் உறுதியான வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது வரை 6,39,31,564 ( 99.71%) வாக்காளர்களுக்கு "SIR" விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும்,97.25% விண்ணப்பங்களை BLOக்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்திருக்கின்றனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.