தடுப்பூசி செலுத்துவதற்கு தினசரி இலக்கு நிர்ணயிப்பதும், வீடு தேடி நடமாடும் வாகனங்கள் மூலம் தடுப்பூசிபோடும் பணியை மேற்கொள்வதும் கிராமப்புற அரசு மருத்துவர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் பல்வேறு நிலைகளில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக, 18 வயதிற்கு மேற்பட்ட முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தாத பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடையாமலும் மிகக்குறைந்த நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தியது ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்களிடம் விளக்கமும் கேட்கப்பட்டு வருகிறது.
மருத்துவர்கள் கோரிக்கை:
இந்நிலையில், தடுப்பூசி இலக்குகள் தினமும் நிர்ணயிக்கும் முறையையும், மருத்துவர்கள் சுகாதாரத்துறை பணியாளர்கள் மன உளைச்சலில் இருந்து விடுபட தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கிராமப்புற அரசு மருத்துவ அலுவலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கடந்த 12 ஆண்டுகளாக கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர் அனி பிரிமின் தனது பேஸ்புக் பக்கத்தில், "வணக்கம். நான் சுகாதார துறையில் மருத்துவராக பணிபுரிக்கிறேன்.கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர்.
சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா காலத்தில் பணிபுரிந்தவர்களுக்கு வாக்குறுதி கொடுத்தது போல் ஊக்கத்தொகை வழங்கியமைக்கு நன்றி.
கொரோனா தடுப்பூசி முகாம்களில் சீரும்சிறப்புமாக பணிபுரிந்துவரும் மருத்துவர்கள் உட்பட சுகாதார பணியாளர்கள் கடந்த ஒரு வாரமாக கடும் மன உளைச்சல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
வீடு தேடி தடுப்பூசி திட்டத்தில் நாங்கள் படும் இன்னல்கள் பல. தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்தியே ஆக வேண்டும் என்ற அழுத்தம் எங்களால் தாங்கமுடியவில்லை.
தடுப்பூசி பணிகள் இலக்கு நிர்ணயிப்பதும், தடுப்பூசி பணிகள் வீடுகளுக்கு செல்வதும் அதனால் பல இன்னல்களை அனுபவிப்பது வாடிக்கையாக உள்ளது. ஐயா, கருணை கூர்ந்து தடுப்பூசி இலக்குகள் தினமும் நிர்ணயிக்கும் முறையையும், மருத்துவர்கள் சுகாதார துறை பணியாளர்கள் மன உளைச்சலில் இருந்து விடுபட உதவுங்கள் ஐயா" என்று பதிவிட்டுள்ளார்.
எதிர்ப்புக்கு காரணம் என்ன:
தமிழகத்தில் ஏற்கனவே அரசு மருத்துவமனைகள், மருத்துவ அமைப்புகள் வாயிலாக சுமார் 2800 இடங்களில் தொடர்ந்து தடுப்பூயிசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், மிகப்பெரிய அளவிலான வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் தொடங்கப்பட்டு, இதுவரை எட்டு தடுப்பூசி முகாம்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பூசியில், தமிழக அரசின் ஒட்டுமொத்த யுக்தியும் சுகாதார செவிலியர்களுக்கு அழுத்தம் கொடுத்து செய்துவிடலாம் என்ற அளவிலே உள்ளது. கொரோனா தடுப்பூசி தொடர்பான கட்டுக்கதைகள், தவறான எண்ணங்கள் மற்றும் சந்தேகங்களை அகற்ற முன்வர வேண்டும் என்றும்,சமூக ஊடகங்களில் கொரோனா தடுப்பூசி குறித்து தவறான கருத்துக்கள் பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதுபோன்ற, ட்விட்டர் கணக்குகள் தடுப்பூசிக்கு எதிரான விஷமத்தனமான கருத்துக்களைத் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றன. தடுப்பூசிக்கு எதிரான தவறான கருத்துக்கள் மிகவும் திட்டமிட்டு நேர்த்தியான முறையில் ஆன்லைனில் பரப்பப்பட்டு வருகிறது.
வீடு தேடி தடுப்பூசி திட்டம்:
தடுப்பூசி போடும் பணியில் ஒருவரையும் கூட தவறவிட்டுவிடக் கூடாது என்கின்ற அளவில் வீடுகள் தோறும் சென்று தடுப்பூசிகள் போடும் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகள் தோறும் சென்று தடுப்பூசி போடும் பணியினை இந்தியாவிலேயே சென்னை மாநகராட்சியில் முதல்முறையாக தொடங்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்கள் வாகனங்கள் மூலம் கிராமங்கள் தோறும் சென்று தடுப்பூசி போடும் பணியினை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாகவே தொடங்கினார்கள்.
தமிழ்நாட்டில் இதுவரை கோவேக்சின் தடுப்பூசி 2-வது தவணை செலுத்ததாவர்கள் 14,07,903 நபர்களும், கோவிஷல்டு 2வது தவணை 51,60,392 என மொத்தம் 65,70,205 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளார்கள். லைவ் லிஸ்ட் தயாரித்து யாருக்கெல்லாம் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டும் என பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தயார் செய்து வருகின்றனர். தடுப்பூசி செலுத்தாத மீதமுள்ள நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.