தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வரும் பிப்ரவரி 1-ந் தேதி முதல் திறக்கப்படலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் வருகின்ற பிப்ரவரி 1 ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படலாம். அதற்கான அறிவிப்பை முதலமைச்சர் முக ஸ்டாலின் விரைவில் வெளியிடுவார். 


அதேபோல், 10, 11, 12 ம் வகுப்புகளை உடனே தொடங்குமாறு ஆலோசனை கூட்டத்தில் வழியுறுத்தி இருக்கிறோம். பிற மாநிலங்களில் 1 ம் வகுப்பு முதல் அனைத்து வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாணவர்கள் நலன்கருதி திறந்தால் அதனை சிறப்பாக செயல்படுத்தி காட்டுவோம் என்றார். கடந்த ஆண்டு கொரோனா தொற்று 2 ம் அலை முடிவுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. அப்பொழுது, நடைமுறையில் இருந்த சுழற்சி முறை போல் இந்தமுறை பள்ளி வகுப்புகள் செயல்படாது. வழக்கம் போலவேதான் வகுப்புகள் செயல்படும். 


காலம் குறைவாக உள்ளத்தால் எங்களது நோக்கம் பள்ளியின் பாடம் திட்டம் முழுவதையும் விரைவில் முடிக்க வேண்டும். அதற்கேற்ப மாணவர்களின் நலன் கருதி வகுப்புகள் நடத்தப்பட்டு மே முதல் இரண்டாவது வாரத்தில் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 


 கடந்த மார்ச் மாதம் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். அதற்கு முந்தைய கல்வியாண்டில் 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். கொரோனாவால் மாணவர்களின் கல்வி, குறிப்பாக தேர்வு எழுதும் பழக்கம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்வி இருந்தது.


 முன்னதாக, கடந்த 3 ம் தேதி இதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழ்நாட்டில் உள்ள 15-18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருவதால், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு கட்டாயம் நேரடி பொதுத்தேர்வு நடைபெறும் எனவும், இல்லம் தேடி கல்வி மாணவர்களுக்கு மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதம் எனவும், மாணவர்களின் கல்வி இடைநிற்றலை இத்திட்டம் தடுக்கும் எனவும் தெரிவித்திருந்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண