தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிப்பை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. இதன்படி, வரும் பிப்ரவரி 19-ந் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.


இந்த தேர்தல் தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகளுக்கு நடைபெற உள்ளது. இந்த தேர்தல் மூலமாக மொத்தம் 12 ஆயிரத்து 838 உறுப்பினர்களின் பதவிகள் நேரடி தேர்தல் மூலமாக நிரப்பப்பட உள்ளது. இது மட்டுமின்றி, மார்ச் 4-ந் தேதி நடைபெறும் மறைமுகத் தேர்தல் மூலமாக 1,298 பதவியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.




நேரடி தேர்தல் :


அடுத்த மாதம் பிப்ரவரி 19-ந் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள், நகராட்சி வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர்களின் பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகளுக்கு உட்பட்ட 1, 374 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 138 நகராட்சிகளுக்கு உட்பட்ட 3 ஆயிரத்து 843 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள், 490 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 7 ஆயிரத்து 621 வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் என மக்கள் மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவியிடங்களுக்கு மக்கள் நேரடியாக வாக்களிக்க உள்ளனர்.


மறைமுகத் தேர்தல் :


முக்கிய பதவிகளான மாநகராட்சி மேயர், மாநகராட்சி துணை மேயர், நகராட்சித் தலைவர், நகராட்சி துணைத்தலைவர், பேரூராட்சித் தலைவர், பேரூராட்சித் துணைத்தலைவர், சட்டப்பூர்வ நிலைக்குழுக்கள், மாவட்ட திட்டக்குழுக்களுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும். மாநிலம் முழுவதும் உள்ள மேற்கண்ட 1,298 பதவிகளுக்கு வரும் மார்ச் 4-ந் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளது.




தமிழ்நாட்டில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால் பலத்த எதிர்பார்பு எழுந்துள்ளது. சட்டசபைத் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களை காட்டிலும் உள்ளாட்சித் தேர்தல்களில் வேட்பாளர்களிடையே பலத்த போட்டி நிலவும் என்பதால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு பணியில் சுமார் 1 லட்சம் போலீசார் வரை ஈடுபட உள்ளனர். மேலும், வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கைகள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு நாளை முதல் வேட்புமனுத் தாக்கல் நடைபெற உள்ளது. வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 4-ந் தேதி. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனுக்களைத் திரும்ப பெற கடைசி நாள் பிப்ரவரி 7-ந் தேதி ஆகும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண