சாலை பாதுகாப்பு சாதனங்கள் ஒரே நிறுவனத்திடம் இருந்து அதிகம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதால் 5 ஆண்டுகளில் 876 கோடி ரூபாய் வரை தமிழ்நாடு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளர்கள் சங்க நிர்வாகி கூறியுள்ளார்.


தமிழ்நாட்டில்  மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் 61 ஆயிரத்து 305 கிலோ மீட்டர் சாலைகள் உள்ளன. இவை மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலை, மாவட்ட இதர சாலைகள் என பிரிக்கப்பட்டுள்ளன. விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பல்வேறு பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மட்டுமல்லாமல், அந்தந்த மாநில நெடுஞ்சாலை துறையும் மேற்கொண்டு வருகிறது. இதற்காக, சாலைகளில் வழிகாட்டி பலகைகள் பொருத்துதல், போக்குவரத்து சிக்னல் அமைத்தல், இரவில் ஒளிரும் சோலார் சாதனங்கள் பொருத்துதல், நடைபாதை கோடுகள் வரைதல், வேகத்தடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு சாலை பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்நாட்டில் இந்தப்பணிகள் மாநில அரசு நிதியில் மட்டுமல்லாமல் உலக வங்கி கடன் உதவி பெற்றும் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 2015 முதல் 2020 வரை இந்தப் பணிகளுக்கு மொத்தமாக 1,752 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 2014 மற்றும் 2015 இல் 450 கோடி ரூபாய், மற்ற ஆண்டுகளில் தலா 300 கோடி ரூபாய் செலவிலும் இந்தப் பணிகள் நடைபெற்றுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட இரவில் ஒளிரும் சாதனங்கள், ரப்பர் கோடுகள் போன்றவை சாலைகளில் சில மாதங்கள் கூட தாக்குப்பிடிப்பதில்லை. திட்டமதிப்பில் கூறியபடி, பல இடங்களில் சாலை வழிகாட்டி பலகைகள் நிறுவப்படவில்லை.




இந்த நிலையில், சாலை பாதுகாப்பு சாதனங்கள், புதுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்திடம் அதிகம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதால் ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுக்கு 876 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “சாலை பாதுகாப்பு சாதனங்கள் ஒரே நிறுவனத்திடம் இருந்தே அதிகம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. விலையும் 50 சதவீதம் வரை கூடுதலாக உள்ளது. இதனால், ஐந்து ஆண்டுகளில் 874 கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொகை பல தரப்பிலும் பங்கு போடப்பட்டுள்ளது. தரமற்ற பொருட்கள், சரியாக பணிகள் இல்லாததால் விபத்துகளை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் சாலை பாதுகாப்பு பணிக்கு முக்கியத்துவம் அளித்து, அதற்கான பணிகளை தரமாக மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறினார்.


மேலும் அவர் கூறுகையில், “பல கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கப்படும் பொருட்களின் இருப்பு, பயன்பாடு குறித்து எந்த கணக்கும் இல்லை. இந்த கணக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும். ஆண்டுதோறும் வீணாகும் இரும்பு தகடு உள்ளிட்ட  சாலை பாதுகாப்பு சாதனங்களை, ஏலத்தில் விற்க வேண்டும். இதன் மூலமாக நெடுஞ்சாலைத் துறையின் நிதி இழப்பை குறைக்க முடியும். நிதியை செலவிட வேண்டும் என்பதற்காக ஒரே சாலைக்கு பலமுறை பெயர் பலகை தயாரித்து வீணடிப்பதற்கும் புதிய அரசு முற்றுப்புள்ளி  வைக்க வேண்டும்” என்றார்.


’கனிம வளம் கொள்ளை, புரளும் கரன்சி’ கண்டுக்கொள்ளுமா அரசு..?