ரேசன் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார்.






அதேபோல், தேர்ந்தெடுக்கப்பட்ட ரேசன் கடைகளில் மானிய கேஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி வெளியிட்ட அறிக்கையில், ‘மாநிலம் முழுவதும் உள்ள 34.773 நியாயவிலைக் கடைகளில் 33377 நியாயவிலைக் கடைகள் கூட்டுறவுத்துறை மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.


கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மூலம் 2,02,45,357 குடும்ப அட்டைகளுக்கு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.  இவற்றில் கிராம பகுதிகளில் 16,994 முழுநேரக் கடைகளும், நகர்ப்புறங்களில் 6,942 கடைகளும் ஆக மொத்தம் 23,936 நியாயவிலைக் கடைகள் முழு நேரக் கடைகளாக இயங்கி வருகின்றன.


மாநிலம் முழுவதும், 9,441 பகுதிநேரக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் கிராமப்புறத்தில் 8,721 கடைகளும் நகர்ப்புறங்களில் 720 கடைகளும் இயங்கி வருகின்றன.


அரசாணை எண் 25இன்படி, தேவையுள்ள நியாய விலைக்கடைகளுக்கு ரூ. 9.55 கோடி செலவில் மேசை, நாற்காலி, மின்விளக்கு. மின்விசிறி மற்றும் மின்னணு எடைத்தராசு ஆகியவற்றை கொள்முதல் செய்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


மாநிலம் முழுவதிலுமுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு தரக்கட்டுப்பாடு தொடர்பான (Quality Control Management) 150-9000 தரச்சான்றிதழும், Security in Supply Chain Management and Storage-க்கான ISO - 28000 தரச்சான்றிதழும், உணவுப் பொருட்கள் இருப்பு வைப்பதற்குத் தேவையான FSSAI சான்றிதழும் பெறுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


நியாயவிலைக் கடைகளின் நிதித்திறனை மேம்படுத்த 892 நியாயவிலைக் கடைகளில், கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்யும் சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் இயங்கி வருகின்றன.


மக்களுக்குக் கலப்படமற்ற தரமான நுகர்வோர் பொருட்களை வழங்கும் விதமாக தமிழக அரசின் ஊட்டி தேயிலை அரசு உப்பு பனை வெல்லம் உள்ளிட்ட காதி பொருட்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மற்றும் மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மஞ்சள் தூள், சிறு தானியங்கள், தேன். மிளகு, காபிப்பொடி சமையல் எண்ணெய் வகைகள், மாவு வகைகள் மசாலா பொருட்கள் மளிகைப் பொருட்கள், சோப்பு ஆகியவையும், நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.


தேர்ந்தெடுக்கப்பட்ட நியாயவிலைக் கடைகளில், பரீட்சார்த்த முறையில் IOC யின் 5 கிகி| 2கிகி சமையல் எரிவாயு சிலிண்டர்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


தேர்ந்தெடுக்கப்பட்ட சில நியாயவிலைக் கடைகளில் Google Pay, Paytm போன்ற UPI வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு படிப்படியாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.


நியாயவிலைக் கடைகளுக்கு அருகில் தேவையான காலியிடம் இருப்பின், அவ்விடங்களில் 10 MT முதல் 50 MT வரை கொள்ளளவு கொண்ட உணவுப் பொருள் வைக்கும் கிடங்குகள் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


நியாயவிலைக் கடைகளில் அரிசி. சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் உள்ள மூட்டைகளை தரையில் வைப்பதற்கு பதிலாக பாதுகாப்பாக இரும்பு Pallets-களின் மீது அடுக்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


நியாயவிலைக் கடைகளில் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை எவர்சில்வர் கொள்கலன்களில் வைத்து விநியோகம் செய்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


மாநிலம் முழுவதிலுமுள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளில் 26,272 நியாயவிலைக் கடைகள் இயங்கி வருகின்றன. அதாவது, ஒரு கிராம பஞ்சாயத்தில் குறைந்தபட்சம் 2 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. எனவே, அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கு 2 கிலோ மீட்டருக்கு மேல் பொது மக்கள் பயணிக்க வேண்டிய நிலை இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.