கடந்த ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. 


 






ஏற்கனவே, ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும், அதாவது இரட்டை தலைமையே நீடிக்கும் என்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.


இந்நிலையில், ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு அளித்தது. இதன்மூலம், இரட்டை தலைமையை உறுதி செய்த தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது.


இச்சூழலில், இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.


இதுகுறித்து ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரன துணை ஒருங்கிணைப்பாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான வைத்திலிங்கம் அளித்த பேட்டியில், "சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தற்காலிகமானது தான். நாங்கள் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். அதுவரை பொறுத்திருங்கள். 


எனவே ஓ.பி.எஸ் ஆதரவாளர்களும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வருத்தமடைய வேண்டாம். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அதில் வெற்றிபெறுவோம்" என்றார்.


இத்தீர்ப்பு வெளியானதையடுத்து எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார்,  ”இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. ஒன்றரைக்கோடி தொண்டர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய தீர்ப்பு இது. தர்மம் வென்றிருக்கிறது; நியாயம் வென்றிருக்கிறது; இனி அடுத்தக்கட்ட முடிவுகளை சட்ட வல்லுநர் குழுவினர் கவனித்து கொள்வார்கள்” என்று தெரிவித்துள்ளார். 


மேலும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் காட்சிய வழியில், சட்டப்பூர்வமாகத்தான் பொதுக்குழு நடைபெற்றதாகவும், இனியும் சட்ட நடைமுறைகளை பின்பற்றியே செயல்படுவோம் என கூறியுள்ளார்.


ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இந்தத் தீர்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தால் நீங்கள் வெற்றி பெறுவீர்களா என்று எழுப்பிய கேள்விக்கு, “ நாங்கள் அனைத்தும் சட்ட ரீதியிலாக அணுகி வருகிறோம். சட்டப்படி பயணிக்கும் எங்களுக்கு செல்லும் இடங்களிலெல்லாம் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.