நீட் தேர்வு முடிவுகளுக்கான உத்தேச விடைக் குறிப்புகளில் தேர்வர்களுக்கு ஆட்சேபனை இருந்தால், அவற்றை ஆட்சேபிக்க இன்றே கடைசித் தேதி ஆகும். 


கடந்த ஜூலை 17-ம் தேதி நாடு முழுவதும் பி.டி.எஸ். எனப்படும் பல் மருத்துவம் மற்றும் எம்.பி.பி.எஸ். எனப்படும் இளங்கலை மருத்துவ படிப்புகள் உள்ளிட்டவற்றுக்காக நீட் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 மாணவர்கள் விண்ணப்பித்தனர். நீட் தேர்வை மொத்தம் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் எழுதினர்.


இந்த தேர்வு நாடு முழுவதும் மொத்தம் 543 நகரங்களில் அமைக்கப்பட்ட 3 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. நீட் தேர்வு இந்தியாவில் உள்ள நகரங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள மாணவர்கள் இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்காக முதல்முறையாக நடத்தப்பட்டது. குறிப்பாக கொழும்பு, காத்மாண்டு, பாங்காக், கோலாலம்பூர், சிங்கப்பூர், துபாய், அபுதாபி, மஸ்கட், ஷார்ஜா, குவைத், தோஹா, மனாமா, ரியாத், லாகோஸ் நகரங்களிலும் நடத்தப்பட்டது.


நீட் தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு மற்றும் ஓஎம்ஆர் தாள்கள் 30ஆம் தேதிக்குள் வெளியாகும் எனவும் நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என்றும் என்டிஏ அறிவித்தது. எனினும்17.78 லட்சம் தேர்வர்களின் தகவல்களைப் பதிவேற்றுவதில் சிரமம் இருப்பதால், சற்று தாமதம் ஏற்படும் என்று தெரிவித்த என்டிஏ, 31ஆம் தேதி விடைக்குறிப்புகளை வெளியிட்டது.  


உத்தேச விடைக் குறிப்பில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், தேர்வர்கள் செப்டம்பர் 2ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் என்டிஏ தெரிவித்தது. இந்நிலையில் விடைக் குறிப்புகளை ஆட்சேபிக்க இன்று (செப்.2) கடைசித் தேதி ஆகும். 


 


ஆட்சேபனை செய்வது எப்படி?


தேர்வர்கள் ரூ.200 பணத்தைச் செலுத்தி குறிப்பிட்ட விடையை ஆட்சேபனை செய்யலாம். இந்தப் பணம் திருப்பித் தரப்படாது. 


ஓஎம்ஆர் விடைத் தாளின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் தேவைப்படும் நபர்களும் ரூ.200 பணத்தைச் செலுத்தலாம். இந்தப் பணமும் திருப்பித் தரப்படாது. தேர்வர்களின் வசதிக்கு ஏற்ப, நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது அளித்த மெயில் ஐடிக்கும் ஓஎம்ஆர் விடைத் தாளின் ஸ்கேன் அனுப்பப்படும். 


* நீட் தேர்வை எழுதியவர்கள் http://neet.nta.nic.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும். 


* Apply for Answer Key Challenge (s) என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும். 


* Test Booklet Code-ஐத் தேர்வு செய்யவும்.


* விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லைக் கொண்டு லாகின் செய்ய வேண்டும். 


என்டிஏ வெளியிட்டுள்ள https://cdnbbsr.s3waas.gov.in/s37bc1ec1d9c3426357e69acd5bf320061/uploads/2022/08/2022083193.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, வழிமுறைகளைப் பின்பற்றி ஆட்சேபிக்க வேண்டும்.


இதுகுறித்து தேசியத் தேர்வுகள் முகமை கூறும்போது, "தேர்வர்களின் ஆட்சேபனை சரியாக இருக்கும் பட்சத்தில், விடைக் குறிப்பு திருத்தி அமைக்கப்படும். எனினும் குறிப்பிட்ட தேதிக்குப் பின்னரோ, கட்டணம் செலுத்தாமலோ விடைக் குறிப்புகளை ஆட்சேபித்தால், அவை கணக்கில் கொள்ளப்பட மாட்டாது" என்று என்டிஏ தெரிவித்துள்ளது.