விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் 61 ஏரிகள் முழுமையாக நிரம்பியது. மேலும் 93 ஏரிகளில் 51 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் நிரம்பியது, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தொடர் மழையால் 61 ஏரிகள் நிரம்பியது
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு நேற்று ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை கொட்டியது. விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மழை நீர் வெளியேற வழியின்றி நான்கு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி, ஏரி போல் காட்சியளித்தது. இதனால், பேருந்துகள் இயக்குவது பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் 14 ஆயிரத்து 141 ஏரிகள் உள்ளன. அதிகபட்சமாக 100 சதவீதம் 1,522 ஏரிகளும், 76 முதல் 99 சதவீதம் வரை 1,842 ஏரிகளும், 51 சதவீதம் முதல் 75 சதவீதம் வரை 2,253 ஏரிகளும், 26 முதல் 50 சதவீதம் வரை 3,370 ஏரிகளும், ஒரு சதவீதம் முதல் 25 வரை 4,534 ஏரிகளும் நிரம்பின.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் நிலவரம்
இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கன மழையால், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 505 ஏரிகளில், 61 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளது. மேலும், 76 முதல் 99 சதவீதம் வரை42 ஏரிகளும், 51 முதல் 75 சதவீதம் வரை 93 ஏரிகளும், 26 முதல் 50 சதவீதம் வரை 186 ஏரிகளும், 25 சதவீதத்திற்கும் குறைவாக 123 ஏரிகளும் நிரம்பியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஏரிகள் நிலவரம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 115 ஏரிகளில், 16 ஏரிகள் 100 சதவீதம் நிரம்பியுள்ளது. மேலும், 76 முதல் 99 சதவீதம் வரை 8 ஏரிகளும், 51 முதல் 75 சதவீதம் வரை 30 ஏரிகளும், 26 முதல் 50 சதவீதம் வரை 46 ஏரிகளும், 25 சதவீதத்திற்கும் குறைவாக 15 ஏரிகளும் நீர் நிரம்பியுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 ஏரிகளில் ஒரு ஏரியில் 50 சதவீதத்திற்கு மேல், 3 ஏரிகளில் 25 சதவீதத்திற்கு குறைவாகவும் நீர் நிரம்பியுள்ளது.
அவசர உதவிக்கு
விழுப்புரம் மாவட்டத்தில், கனமழையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு 04146-223265, 9498100485 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்தது. இது தொடர்ந்து தாழ்வு மண்டலமாகவும், அதன்பின்னர் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும் என சொல்லப்பட்டது. ஆனால் வானிலை அமைப்பு நிலப்பரப்பு அருகில் வரும்போது வலுவடைவதில் பிரச்சினை ஏற்பட்டு, அதன் அமைப்பும், மழைக்கான கணிப்பும் மாறிப்போனது.
இதனால் வங்கக்கடலில் நீடிக்கும் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக கூட வலுப்பெறாது என்று வானிலை ஆய்வு மையம் திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. வானிலை அமைப்பு மாறியதால், நேற்று பெரும்பாலான இடங்களில் மழைக்கான வாய்ப்பு இல்லாமல் போனது.
இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு
இந்த நிலையில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் அதாவது இன்று, வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை கடந்து நகர்ந்து செல்லக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.