வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கடந்த இருதினங்களுக்கு முன்பு கரையை கடந்தது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது.
கடந்த 7 ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை தமிழகத்தில் பரவலாக கனமழை பதிவாகி உள்ளது. இந்த கனமழை காரணமாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தில் சராசரியாக 10 செ.மீ. வரை மழை பதிவாகி உள்ளது. மேலும், சென்னையில் இந்தாண்டு 74 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த கனமழை காரணமாக சென்னை முழுவதும் ஆங்காங்கே மழைநீர் தேங்கி பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். கடந்த 2015 ம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பிறகு, தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் வடிகால் பாதைகள் மற்றும் தேங்கிய நீர்களை வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இருப்பினும் கடந்த வாரம் பெய்த கனமழையால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் புகுந்தது. இந்தநிலையில், தமிழத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ரூ.5,000 வழங்க வேண்டும் என பாஜக பொதுச் செயலாளர் சி.டி. ரவி கோரிக்கை வைத்துள்ளார். தொடர்ந்து, மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பெய்த மழை மற்றும் வெள்ளத்தால் சுமார் 1.5 லட்சம் ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் முழ்கியுள்ளதால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 20,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல், 2016-17ஆம் ஆண்டுக்குப் பிறகு பெற்ற பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றுபாஜக தமிழக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கனமழையால் பயிர்களை இழந்த விவசாயிகள் மத்திய அரசின் பயிர்க் காப்பீட்டுத் திட்டமான பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா மூலம் பயனடைவார்கள் என்றும், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு, மத்திய அரசிடம் விவரங்களை வழங்குவார் என்றார். மேலும், அவரது தலைமையிலான குழு பயிர் இழப்பு குறித்த மதிப்பீட்டை மத்திய அரசிடம் அளித்து தமிழகத்திற்கு நிதி கிடைக்க மாநில பாஜக அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்