எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருந்தபோது, சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக சைக்கிள் பயணம் மேற்கொள்வதும், அப்பகுதியில் உள்ள தேநீர் கடைகளில் தேநீர் குடிப்பதும், பொதுமக்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்த செயல்பாடு மு.க.ஸ்டாலினின் தேர்தல் யுக்தி என கூறப்பட்டது, தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று வரும் ஜூலை மாதம் 7-ஆம் தேதியுடன் இரண்டு மாதங்கள் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் மீண்டும் தனது வழக்கமான சைக்கிள் பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தொடங்கியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையான இன்றைய தினம் அதிகாலையிலேயே சைக்கிளிங் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இப்படத்தில் முதல்வரிடம் பொதுமக்கள் செல்பி எடுத்துக்கொள்வது, தேநீர் அருந்துவது, முதியவர் ஒருவரிடம் பேசுவது உள்ளிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் அருகில் உள்ளார்.
கடந்த மே மாதத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் வாக்கெடுப்பின்போது, நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்குச்சாவடி வரை சைக்கிளில் சென்று வாக்களித்தார். பெட்ரோல், டீசல் விலை உயர்வை சுட்டிக்காட்டவே நடிகர் விஜய் அவ்வாறு சைக்கிளில் செல்கிறார் என கூறப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல் விலை 100- ரூபாயை தொட்டுள்ள நிலையில் அதனை சுட்டிக்காட்டவே ஸ்டாலின் சைக்கிள் பயணத்தை மீண்டும் தொடங்கி உள்ளதாக சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவுகளை இட்டு வருகின்றனர்.