சென்னை மெட்ரோ ரயில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஆம் 2022 ஆம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயிலில் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் எண்ணிக்கை தான் அந்த சாதனை. 2022 ஆம் ஆண்டில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 6.09 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இது தொடர்பான மாத வாரியான புள்ளிவிவரத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


ஜனவரி - 25,19,252
பிப்ரவரி - 31,86,683
மார்ச் - 44,67, 756
ஏப்ரல் - 45,46,330
மே - 47,87,846
ஜூன் - 52,90,390
ஜூலை - 53,17,659
ஆகஸ்ட் - 56,66,231
செப்டம்பர் - 61,12,906
அக்டோபர் - 61,56,320
நவம்பர் - 62,71,730
டிசம்பர் - 66,64,652


என மொத்தம் 6,09,87,765 பயணங்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டதாக அந்த புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.


சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை - சென்னை சென்ட்ரல் வரையும் 2 வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவில் 52 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.


இந்நிலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடத்தில் 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் வரை 4-வது வழித்தடத்தில் 26.1கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் - சோழிங்கநல்லூர் வரை 5-வது வழித்தடத்தில் 47 கி.மீ. தொலைவுக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணிகளை 2025-ம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் நிறைவடைந்த பிறகு, 3 வழித்தடங்களில் ஓட்டுநர் இல்லாத 138 மெட்ரோ ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 


மாதவரம் - சிறுசேரி சிப்காட் வரை 3-வது வழித்தடம் மற்றும் மாதவரம் - கோயம்பேடு வரை 5-வது வழித்தடத்தில் 70 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரை 4-வது வழித்தடத்தில் 26 மெட்ரோ ரயில்களும், கோயம்பேடு முதல் எல்காட் (சோழிங்கநல்லூர் முன்பாக வரும் மெட்ரோநிலையம்) வரை 5-வது வழித்தடத்தில் 42 மெட்ரோ ரயில்களும் என்று மொத்தம் 138 மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. ஒவ்வொரு ரயிலும் 3 பெட்டிகளைக் கொண்டிருக்கும்.


இது நடைமுறைக்கு வந்தால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.