நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு விரைந்து அனுப்புமாறு ஆளுநர். என். ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

  


அதில், பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவிற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெறும் வகையில் கடிதத்தை அனுப்பி வைக்க வேண்டும் என முதல்வர் வலியுறுத்தியுள்ளார். 


இது தொடர்பாக செய்தி மற்றும் மக்கள் ஊடக தொடர்பு துறை சார்பாக வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்களுக்கு இன்று   (14-4-2022) எழுதியுள்ள கடிதத்தில், நீட் தேர்வு தொடர்பான மசோதாவிற்கு விரைவில் மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறும் வகையில் இந்திய அரசுக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொண்டுள்ளார்.


மீண்டும் கடிதம் 


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இப்பொருள் குறித்து இருமுறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவைக்கப்பட்ட போதும், நேரில் ஆளுநரைச் சந்தித்து இது குறித்து தான் பேசிய பின்னரும், நீட் தேர்வு மசோதாவானது மாண்புமிகு ஆளுநர் அவர்களால், மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற இந்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படாதது மிகுந்த வேதனையளிப்பதாக தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், தான் நேரில் சந்தித்து இப்பொருள் குறித்து வலியுறுத்தியபோது மாண்புமிகு ஆளுநர் அவர்கள்  இம்மசோதா தன்னால் இந்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று உறுதியளித்ததையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.


உறுதியான பதில் கிடைக்கவில்லை 


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இருமுறை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டும், மாண்புமிகு ஆளுநர் அவர்களிடம் இக்கோரிக்கையினை நேரில் வலியுறுத்திய பின்னரும், இந்நிகழ்வில் முன்னேற்றம் காணப்படாததால், இன்றைய தினம் (14-4-2022) தனது அமைச்சரவையின் இரண்டு மூத்த அமைச்சர்களை மாண்புமிகு ஆளுநரைச் சந்தித்து இக்கோரிக்கையினை மீண்டும் வலியுறுத்த கேட்டுக்கொண்ட போது, அவர்களிடம் நீட் தேர்வுக்கான மசோதாவானது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இந்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்ற உறுதியான பதில் பெறப்படாத நிலையில், தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் மாண்பினையும் கருத்தில் கொண்டு இன்று ஆளுநர் மாளிகையில் வழங்கப்படும் தேநீர் விருந்தில் கலந்துகொள்வது முறையாக இருக்காது என்று தனது கடிதத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார்.  


இணக்கமான உறவு


மாநில மக்களின் நலனை முன்னிறுத்தி, அரசியலமைப்புச் சட்டத்தின்படி இருவரும் தங்கள் கடமைகளை ஆற்றும் பொழுது மாநில மக்களும், மாநிலமும் வளம் பெறும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் தெரிவித்து, மாண்புமிகு ஆளுநருக்கும் மாநில அரசுக்குமான உறவு தொடர்ந்து இணக்கமாகவும், சுமூகமாகவும் இருக்குமென்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது