நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோ நகரில் வசிப்பவர் தங்கராசு, இவர் கடந்த 40 வருடங்களாக தெரு கூத்து கலைஞராக பெண் வேடமிட்டு ஆடி வருகிறார். மேலும் இவர் பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனின் அப்பாவாக நடித்து அனைவராலும் பேசப்படும் அளவிற்கு தனது நடிப்பு திறனை வெளிக்காட்டி இருந்தார். தொழிலில் வாய்ப்பு இல்லாத காலங்களில் பாளையங்கோட்டை மார்க்கெட் வாசலில் வெள்ளரிக்காய் வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்  கொரோனா காலத்தில்  வியாபாரம் மிகவும் மந்தமானதால் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார். இளங்கோ நகரில் உள்ள அவரது வீடு மழையில் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இது குறித்து  பல்வேறு செய்தி நிறுவனங்களில் செய்தி வந்தது. அதனடிப்படையில் மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக அதிகாரிகளை அந்த இடத்துக்கு சென்று பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார். அதன் பேரில் அந்த இடத்தில் புதிய வீடு ஒன்றை கட்டுவதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் பல்வேறு நண்பர்கள் உதவியோடு வேலை தொடங்கப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. அதன் கிரகப் பிரவேசம் இன்று நடைபெற்று தங்கராசு புது வீட்டிற்கு குடியேறி உள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு மற்றும் பரியேறும் பெருமாள் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகியோர் ரிப்பன் வெட்டி வீட்டை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர், இந்த நிகழ்ச்சியில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் பல்வேறு நண்பர்கள் உறவினர்கள் கலந்து கொண்டனர்.




தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் கூறும் பொழுது, பரியேறும் பெருமாள் படத்தில் நடத்த தங்கராஜின் கலையை பாராட்டும் வண்ணம் விளிம்பு நிலையில் உள்ள கலைஞரை தூக்கி விடும் வகையில் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மற்றும் நண்பர்கள் சேர்ந்து வீடு கட்டி கொடுத்து உள்ளனர். சந்தோசமான விசயம், சினிமா மூலம் இது சாத்தியப்பட்டு உள்ளது என்பது மிகுந்த சந்தோசம், இதே போல பல நாட்டுப்புற கலைஞர்களையும் கொண்டு வரவேண்டும் என்பதே எனது ஆசை என தெரிவித்தார்.




கலைஞர் தங்கராசு கூறும் பொழுது,  நான் சிறு வயதிலிருந்தே வாழ்க்கையில் கஷ்டப்பட்டேன். இரவு முழுவதும் ஆடுவேன். காலையில் வெள்ளரிக்காய் வியாபாரம் செய்வேன், தூக்கமின்றி நான் பட்ட கஷ்டத்திற்கு தான் இப்போது பலன் கிடைத்து உள்ளது. பலரை தேர்வு செய்தோம் ஆனால் அது அமையவில்லை, நீங்கள் தான் வரணும் என இரவு நேரத்தில் வந்து அழைத்தனர். நான் படம் நடித்து அனுபவமில்லை வரவில்லை என்று கூறினேன். ஆனால் கட்டாயப்படுத்தி அழைத்து சென்று இவ்வளவு பேரும் புகழும் கிடைக்க காரணமாக இருந்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். வீடு கட்ட ஏற்பாடு செய்ய உதவிய எழுத்தாளர் நாறும்பூநாதன், மாவட்ட நிர்வாகம் ஆகிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என தெரிவித்தார்.