மத்திய அரசு மருத்துவ இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கு நாடு தழுவிய நீட் எனப்படும் நுழைவுத்தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்வால் தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவபடிப்பில் சேர முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
தி.மு.க. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தனர். இதையடுத்து, நீட் தேர்வு குறித்த பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டம் ஏ.கே.ராஜன் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு ஏ.கே.ராஜன் பேசியதாவது,
“ நீட் தேர்வு குறித்த முக்கியமான தரவுகள் தேவைப்படுகின்றன. தமிழ்வழிக்கல்வி மாணவர்கள், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு எப்படி பாதிப்பு ஏற்படுகிறது என ஆய்வு செய்து தரவுகளின் வழி அறிக்கை தாக்கல் செய்வோம்.
குழுவில் உள்ள உறுப்பினர்கள் எல்லாருடைய கருத்தும் நீட் தேர்வால் பாதிப்பு இருக்கிறது என்பதுதான். பாதிப்பு இல்லை என்று சொல்ல முடியாது. பாதிப்பு இருப்பதால்தான் அரசு குழு அமைத்திருக்கிறது. எவ்வளவு தூரம் பாதிப்பு என்பதைத்தான் நாங்கள் ஆய்வு செய்வோம். ஒரு மாதத்திற்குள் அறிக்கை அளிப்போம்.
மாணவர்களுககு நீட் பயிற்சி அளிக்கப்படுவது குறித்து நாங்கள் கருத்து சொல்ல முடியாது. அடுத்த திங்கள்கிழமை மீண்டும் ஆலோசனை நடத்துவோம். இடைக்கால அறிக்கைகளை அளிக்க மாட்டோம். இறுதி அறிக்கை மட்டுமே அளிப்போம்.”
இவ்வாறு அவர் கூறினார். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியவர் ஏ.கே.ராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட் நுழைவுத்தேர்வால் மன உளைச்சல் மற்றும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில் தமிழ்நாட்டில் இதுவரை 13க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் நீட் தேர்விற்கு கடும் எதிர்ப்பு உள்ளது. மேலும், நடப்பாண்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுகளையும் நடப்பாண்டில் ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சித் துணைத்தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வமும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : AIADMK Meeting Update: உழைப்பைச் சுரண்டும் ஒட்டுண்ணி.. 15 பேர் நீக்கம்.. அதிமுக கூட்டத்தில் சசிகலா ஆடியோ விவகாரம்!