அதிமுகவின் சட்டப்பேரவை துணைத் தலைவராக ஒ.பன்னீர்செல்வமும், கொறடாவாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.




ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நீண்ட இழுபறிக்கு பின்னர் இந்த முடிவு எடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது.  நண்பகல் 12 மணிக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் - இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தலைமையில் தொடங்கிய கூட்டம், 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. யார் துணைத் தலைவர், யார் கொறடா என்பதில் இருதரப்பிற்கும் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. மனோஜ்பாண்டியனை கட்சியின் கொறடாவாக ஒபிஎஸ் முன்னிறுத்தினார். ஆனால், அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. கட்சியில் பல சீனியர்கள், 3 முறைக்கு மேல் எம்.எல்.ஏ ஆனவர்கள் இருக்கும்போது மனோஜ்பாண்டியனுக்கு எதன் அடிப்படையில் கொறடா பொறுப்பு தருவது என கேள்வி எழுப்பப்பட்டது. இதனால், ஒபிஎஸ்-சை சமாதானம் செய்யும் வகையில் ஏற்கனவே பேசப்பட்டது மாதிரி நீங்களே துணைத் தலைவராக இருந்துக்கொள்ளுங்கள் என சமரசம் செய்ய, அதற்கு ஒத்துக்கொண்ட ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கொறடாவாக நியமிக்க ஒப்புதல் தெரிவித்தார். அதன் அடிப்படையில், இறுதியாக இந்த இருவரும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.  இதற்கிடையில்,  எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே ஹைட்ரோகார்பன் ஏல அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் பிரதமருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தும் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டார்.


முன்னதாக எதிர்க்கட்சித் தலைவராக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில், அந்த கூட்டத்தில் இருந்து முதல் ஆளாக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெளியேறியிருந்தார். அதன்பிறகு, எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் கொறடா யார் என்பதில் இரு தரப்பிற்குள்ளும் முடிவு எட்டப்படாமல் இருந்தது. ஒபிஎஸ் இல்லாமல் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் எடப்படி பழனிசாமி தனியாக ஆலோசனை நடத்தியது இருவரின் இடையே மனக்கசப்பு இருப்பதை உறுதி செய்தது. இந்நிலையில், கட்சியின் கொறடா பதவியை தனது ஆதரவாளரான மனோஜ்பாண்டியனுக்கு கொடுக்க வேண்டும் என மல்லுக்கட்டிக்கொண்டிருந்த ஓபிஎஸ், அது முடியாமல்போனதால், தற்போது துணைத் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளிலும் அதிமுகவை வெற்றி பெற வைத்த முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏவுமான எஸ்.பி.வேலுமணிக்கு எம்.எல்.ஏக்களை கட்டுப்படுத்தும் முக்கியமான பதவியான கொறடா பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.


அதேபோல், துணைக் கொறடாவாக அரக்கோணம் எம்.எல்.ஏ ரவி, பொருளாளராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, செயலாளராக முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு எம்.எல்.ஏவுமான கே.பி.அன்பழகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.