கொரோனா அப்டேட், டவ்-தே புயல் நிலவரம்.. இன்றைய முக்கியத் தலைப்புச் செய்திகள் இதோ..

Latest News in Tamil : ரெம்டெசிவர் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது, குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

Continues below advertisement

"டவ்-தே"  தீவிர புயல் இன்று மதியம் அல்லது மாலையில் குஜராத்தில் போர்பந்தர் மற்றும் நாலியாவுக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழையால் பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டது. தற்போது,  அணையிலிருந்து 1,900 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மழையின் தீவிரத்தைப் பொறுத்து 5000 கன அடி வரை திறக்க வாய்ப்புள்ளது.

கொரோனா நோய்த்தொற்று மற்றும் தடுப்பூசி தொடர்பாக  பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் இடங்களில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். கிராமப்புற பகுதிகளில் பிராணவாயுவின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக பிராணவாயு செறிவூட்டிகளை உள்ளடக்கிய விநியோகத் திட்டத்தை மேற்கொள்ளுமாறு பிரதமர் உத்தரவிட்டார். 


ரெம்டெசிவர் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்களை கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது, குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார். ஆதார் இல்லாத காரணத்தால்,  கொரோனா சிகிச்சை, தடுப்பு மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மறுக்கப்படக்கூடாது என்று தனிநபர் அடையாள ஆணையம்  தெளிவுபடுத்தியுள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு சரி செய்யப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். தமிழகத்தில் சுகாதாரத்துறையுடன் தொழில்துறையும் இணைந்து ஆக்சிஜன் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நெதர்லாந்து நாட்டில் இருந்து 4 டன் வெப்பநிலை கொதிகலன்கள், சீனாவில் இருந்து 12 கண்டெய்னர் மூலமாக ஆக்சிஜன் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித், ஆளுநர் மாளிகையில், தமிழக முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின், அவர்களிடம் ஆளுநரின் விருப்புரிமை நிதியிலிருந்து, கொரோனா  நிவாரணப் பணிகளுக்காக, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.


 

கொரோனா  தடுப்புப் மருந்துக்கான சர்வதேச ஒப்பந்தப் புள்ளியை தமிழக அரசு கோரியுள்ளது. 90 நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வழங்க தயாராக உள்ள நிறுவனங்கள் மட்டும் ஜூன் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் ஆஷிம் பானர்ஜி கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக 303 பேர் உயிரிழந்தனர். இதன், காரணமாக மாநிலத்தின் கொரோனா இறப்பு எண்ணிக்கை  17,359-ஆக அதிகரித்துள்ளது.

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola