மதுரையில் முன்பகை காரணமாக புரோட்டா மாஸ்டரை தலையில் கல்லைப்போட்டு கொலை செய்து, பழிதீர்த்த அண்ணன் - தம்பி உள்ளிட்ட 3 பேர் கைது.

தனியாக வசித்த காதல் தம்பதி
 
மதுரை மாநகர் அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, கரும்பாலை பகுதியைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மணிமேகலை என்ற மாற்று சமுதாய பெண்ணை, காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்கள். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக கரும்பாலை பகுதியைச் சேர்ந்த பழனியப்பா என்பவரின் தம்பி உதயகுமாரை தாக்க முயன்றது தொடர்பாக இசக்கிமுத்து மற்றும் பழனியப்பா கும்பலுக்கு இடையே முன்பகை உருவாகியுள்ளது. இந்நிலையில் கடந்தாண்டு ஏற்பட்ட மோதலால் மனைவியினுடைய அறிவுறுத்தல் படி, திண்டுக்கல்லுக்கு மனைவியுடன் சென்று வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இசக்கிமுத்து குடும்பத்தினர், சில மாதங்களுக்கு முன்பாக மீண்டும் கரும்பாலை பகுதிக்கு வந்து வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
 
மூன்று நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பியோட்டம்
 
இசக்கிமுத்து மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, உலக தமிழ்ச் சங்கம் எதிரேயுள்ள கரும்பாலை சாலையில், அவரை வழிமறித்த பழனியப்பா மற்றும் அவரது தம்பி உதயகுமார் அவரது நண்பர் காளிதாஸ் கும்பல் வாக்குவாதம் செய்து சண்டையிட்டுள்ளனர். அப்போது அருகில் இருக்கக்கூடிய பெரிய கல்லை எடுத்து தலையில் போட்டு இசக்கிமுத்துவின் முகத்தை சிதைத்துள்ளனர். இதில் ரத்தவெள்ளத்தில் சாலையில் கிடந்த இசக்கிமுத்து சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் கொலை செய்த 3 பேரும் தப்பியோடிள்ளனர்.
 
கதறி அழுத மனைவி
 
இதனை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு அளித்த தகவல்களையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல் துறையினர் கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். சிசிடிவி பதிவு மூலமாக குற்றவாளிகளை அடையாளம் காணப்பட்டது. இதனையடுத்து கொலை நடந்த  இடத்தில் விசாரணை நடத்திய காவல்துறையினர், உடலை கைப்பற்றி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக சாலையில் கிடந்த இசக்கி முத்துவின் சடலத்தை பார்த்த அவரது மனைவி மணிமேகலை கண்ணீர் விட்டு கதறி அழுதார். ”நாம் மதுரைக்கு வர வேண்டாம் என சொல்லியும் கேட்காமல் வந்தோம் இப்படி உன்னை கொன்று விட்டார்களே” - என அழுதது சோகத்தில் ஆழ்த்தியது.
 
பழிதீர்ப்பு
 
பின்னர் இசக்கிமுத்துவை கொலை செய்தததாக அதே பகுதியைச் சேர்ந்த பழனியப்பா, உதயகுமார் மற்றும் அவரது நண்பர் காளிதாஸ் ஆகிய மூவரும் ஆரப்பாளையம் பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற காவல் துறையினர் மூவரையும் கைது செய்தனர். பின்னர் அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துவந்த விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் முன்பகை காரணமாக பழி தீர்ப்பதற்காக, நடுரோட்டில் இளைஞரை தலையில் கல்லை போட்டு, முகத்தை சிதைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.