திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவிற்கு ஒட்டுமொத்தமாக 14 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தயார் நிலையில் உள்ளது என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
கந்த சஷ்டி திருவிழா:
சென்னை கொளத்தூரில் உள்ள அகரம் ஜெகந்நாதன் சாலையில் முதலமைச்சரால் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ள முதல்வர் படைப்பகத்தின் முன்னேற்பாடு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, "இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 79 முருகன் கோவில்களில் குடமுழுக்கு நடந்துள்ளது. 7 முருகர் கோவிலில் பெருந்திட்ட வரைவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழ் கடவுள் முருகனுக்கு எந்த ஆட்சியும் செய்யாத பெருமையை இந்த ஆட்சி செய்துள்ளது.
திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவான 7ஆம் தேதி 6 லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, திருக்கல்யாணத்திற்கு 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக கந்த சஷ்டி விழாவிற்கு 14 லட்சம் பக்தர்கள் வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் சேகர் பாபு சொன்னது என்ன?
அந்த பக்தர்களுக்கு தேவையான கழிப்பிட வசதி தீயணைப்பு வாகனம் குடிநீர் வசதி அனைத்து வசதிகளும் திட்டமிடப்பட்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. கந்த சஷ்டி திருநாளில் 12 திருக்கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இருக்கக்கூடிய மாணவ மாணவிகளும் இசைக்கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் 738 பேரை வைத்து கந்த சஷ்டி பாராயணமும் படிக்கப்பட உள்ளது.
இன்று மாலை திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில் கந்த சஷ்டி பாராயணத்தை நான் தொடங்கி வைக்க இருக்கிறேன்" என்றார்.
இதனைத் தொடர்ந்து மாதாவரம் பேருந்து நிலையம் மற்றும் அண்ணா நகர் கிழக்கு முழு நேர நூலகத்தின் பணிகளையும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இந்த ஆய்வின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் மூர்த்தி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: Breaking News LIVE 2nd NOV: "இந்தியாவிலேயே தமிழ்நாடும், கேரளாவும்தான் முற்போக்கு மாநிலங்கள்” - துணை முதலமைச்சர் உதயநிதி