தவெக தலைவர் விஜய் குறித்து விமர்சிக்க வேண்டாம் என அதிமுக நிர்வாகிகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வரும் 2026 தேர்தலில், விஜயுடன் கூட்டணி அமைய வாய்ப்பிருப்பதால் அவர் இப்படி பேசியிருப்பதாக கூறப்படுகிறது.
பிளான் போடும் இபிஎஸ்:
அண்மையில் நடந்து முடிந்த விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக மாநாடு, மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிக்கு தயார் நிலையில் உள்ளதாகவும் அறிவித்து இருந்தார். மேலும், மத்தியில் ஆளும் பாஜக மற்றும் மாநிலத்தில் ஆளும் திமுக ஆகிய கட்சிகளை, பிரிவினைவாத கட்சி மற்றும் குடும்ப அரசியல் கட்சி என மறைமுகமாக சாடியிருந்தார்.
ஆனால், அதிமுகவை அவர் தாக்கி பேசவில்லை. இதனால், விஜய் அதிமுக உடன் நெருக்கம் காட்டுவதாக கருதப்பட்டது. இதனால், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக - தவெக கூட்டணி அமையும் என கணிக்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் விஜயின் அரசியல் நிலைப்பாட்டை கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனால், அதிமுகவினரோ விஜயின் அரசியல் வருகையை பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில், விஜய் குறித்து விமர்சிக்க வேண்டாம் என அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசியிருப்பது அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது.
அதிமுக - விஜய் கூட்டணி அமையுமா?
கட்சி தொடங்குவதற்கு முன்பே விஜய்யின் அரசியல் நகர்வு என்னவாக இருக்க போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது. கொள்கை என்ன, யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்பது பெரும் கேள்விகளாக எழுந்தன.
தவெகவின் முதல் மாநாட்டில் கொள்கைகளை அறிவித்து, கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார். நாம் தமிழர், விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் அவர் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டன. ஆனால், முதல் மாநாட்டில் கொள்கைகளை அறிவித்ததில் இருந்து விஜயை சீமானும், திருமாவும் விமர்சித்தகு வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் நகர்வுகள், ஒட்டுமொத்த மாநில அரசியலை திருப்பி போடுமா என கேள்விகளை எழுப்புகிறது.
அண்டை மாநிலமான ஆந்திராவில் உள்ள பவன் கல்யாணை போன்று கூட்டணி ஆட்சியில் இடம்பெற்று, துணை முதல்வர் பதவி பெற்று முதலில் கட்சியை வலுவாக கட்டமைக்கும் பணியில் விஜய் ஈடுபடுவார் எனவும் கூறப்படுகிறது.