காவிரி ஆறு குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு, அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீர் பாதிக்கப்படும் என்பதால் மாநில அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதை பொருட்படுத்தாத கர்நாடக அரசு மேகதாது அணை கட்டியே தீருவோம் என தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.


விஸ்வரூபம் எடுக்கும் மேகதாது விவகாரம்:


தமிழ்நாடு அரசும் அதை எதிர்த்து  சட்டரிதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதற்கிடையே, கர்நாடக துணை முதலமைச்சரும் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவருமான டி.கே. சிவக்குமார், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது உறுதி என பேசி சளசளப்பை ஏற்படுத்தினார். 


அண்மையில் டெல்லி சென்ற டி,கே. சிவக்குமார் மத்திய நீர்வள அமைச்சரை சந்தித்து, மேகதாது அணை கட்டுவது தொடர்பான திட்டத்தை விளக்கியுள்ளார். அப்போது, மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்,  கர்நாடக அரசின் நீர்ப் பாசனத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் மற்றும் நதிநீர்ப் பங்கீடு பிரச்னைக்கு புதிதாக ஒரு தீர்ப்பாயத்தை ஏற்படுத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.


குவிந்த எதிர்ப்புகள்:


இதுதொடர்பான தகவலகள் வெளியானதுமே தமிழிநாட்டில் இருந்து கர்நாடக அரசுக்கு கடும் எதிர்ப்புகள் குவிந்தன. கர்நாடகாவின் செயல்பாட்டிற்கு தமிழ்நாடு அரசு உரிய பதிலடி தர வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆளும் திமுக உடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் இரட்டை நிலைப்பாட்டை கொண்டு, தமிழ்நாடு மக்களை ஏமாற்றுவதாக அதிமுக மற்றும் பாஜக போன்ற எதிர்க்கட்சிகள் சாடின.


இதற்கிடையே, அரசு முறை பயணமாக டென்மார்க் சென்றுவிட்டு சென்னை திரும்பிய அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.


அப்போது, “காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடகாவின் நிலை குறித்து பேச முடியாது. அதே போன்று கர்நாடகத்திற்கு சென்றும் காவிரி குறித்து பேச முடியாது. அவ்வாறு பேசுவதும் சட்டப்படி தவறு. காவிரி நதிநீர் விவகாரம் குறித்து விவாதிக்க  அமைப்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. எனவே முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விட்டு, அதன் பிறகு டெல்லி சென்று காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளைச் சந்திப்பேன்” என தெரிவித்தார்.


இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நாளை டெல்லி செல்வது உறுதியாகியுள்ளது. மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்றும் அதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் கூறியிருந்த நிலையில் அமைச்சர் துரைமுருகனின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.