கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட தீவிர முயற்சி எடுத்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு கர்நாடகவிற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியிருந்தார். அவரது கடிதத்திற்கு, தமிழ்நாட்டில் நலனுக்கு எதிராக உள்ள மேகதாது அணை கட்டும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினும் வேண்டுகோள் விடுத்து எடியூரப்பாவிற்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இந்த சூழலில், கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை ஓரிரு தினங்களுக்கு முன்பு பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது மேகதாது அணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முதன்மை வழக்குகள் ஏதும் நிலுவையில் இல்லை. இடைச்செருகல் மனு மட்டுமே உள்ளது. அதனை சட்டப்படி முறியடித்து மேகதாது அணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்த நிலையில், கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக தமிழக அரசின் சார்பில் வரும் 12-ஆம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் தமிழக அரசு அடுத்து மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட உள்ளது. சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் வரும் 12-ஆம் தேதி காலை 10.30 மணியளவில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
கடந்த சில தினங்களுக்கு டெல்லி சென்ற தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின்போது, தமிழக அரசின் அனுமதி இல்லாமல் கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.
முன்னதாக, கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்ட தீவிரமாக கடந்த சில ஆண்டுகளாக முயற்சி எடுத்து வருகிறது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லது குமாரசாமி தலைமையிலான அரசு என எந்த அரசு வந்தாலும் மேகதாது அணை கட்டுவதில் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். கடந்த 2018ம் ஆண்டு மேகதாது அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது முதல் அந்த மாநில அரசு இந்த விவகாரத்தில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா மேகதாது அணை கட்டுவது தொடர்பாக அவ்வப்போது அனைத்துக்கட்சி கூட்டங்கள் நடத்தி ஆலோசனைகளை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக அரசு சமீபத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டிய அணையால் கிருஷ்ணகிரி, ஓசூர் பகுதிகளைச் சுற்றியுள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.