சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, நீலகிரி, கோவை மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 11-ந் தேதி வரை மூன்று நாட்களுக்கு மிகன கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, சிவகங்கை, ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை  பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. இன்று புதுச்சேரி, காரைக்காலில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். நேற்று சென்னையில் திடீரென கனமழையைப் போல இன்றும் சென்னையில் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  


தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசை மாறுபாடுகள் காரணமாக தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் எட்டு மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி, சென்னையில் நேற்று இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. எழும்பூர், தி.நகர், கிண்டி, கோடம்பாக்கம், அண்ணாசாலை ஆகிய பகுதிகளில் ஓரளவு கனமழை பெய்தது. ஆவடி, அம்பத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர், கொரட்டூர், பல்லாவரம், விருகம்பாக்கம், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், புரசைவாக்கம், பூவிருந்தவல்லி, செம்பரம்பாக்கம், ராமாபுரம், அயனாவரம், குரோம்பேட்டை, அசோக்நகர், திரு.வி.க. நகர், கோயம்பேடு, திருமுல்லைவாயல், மாதவரம், புழல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மேலும், ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.


சென்னையின் புறநகர் பகுதியான திருவொற்றியூர், எண்ணூர், மணலி, மாதவரம், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், பெரம்பூர் பகுதிகளிலும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதன்காரணமாக, சாலையில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேற்கண்ட பகுதிகள் மட்டுமின்றி சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், ஒட்டியம்பாக்கம், சிட்லப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும், செங்கல்பட்டு மாவட்டத்தின் கீழ் வரும் பகுதிகளான கேளம்பாக்கம், நாவலூர், தாழம்பூர், சிறுசேரி ஆகிய பகுதிகளிலும் சுமார் 45 நிமிடங்கள் வரை மழை கொட்டித்தீர்த்தது. பலத்த காற்றுடன் கனமழை திடீரென பெய்ததால் சாலை எங்கும் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் ஓடியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிட்டது.


சென்னை மட்டுமின்றி மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் நேற்று இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. மதுரையைச் சுற்றிலும் திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி, பேரையூர் ஆகிய பகுதிகளிலும் சுமார் ஒரு மணி நேரம் வரை கனமழை பெய்தது. திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் கனமழை கொட்டித் தீர்த்தது.  தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக இவ்வாறு மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த சூழலில், இன்றும் மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த மழையால் விவசாயிகள் பலரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக பேட்டி அளித்துள்ளனர். 


கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில வாரங்களாக காலை முதல் மதியம் வரை வெயில் வாட்டி வதைத்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.