கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த 18வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வந்தன.
இன்று காலை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதல் அநேக இடங்களில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வந்தது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் திமுக 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் தலா 2 தொகுதிகளிலும் போட்டியிட்டனர்.
இந்த நிலையில், தற்போது வந்துள்ள முடிவுகளின்படி தமிழ்நாட்டில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது.
திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு. கருணாநிதி மறைந்த பின் தலைவராக 2018ஆம் ஆண்டு பொறுப்பேற்றது தொடங்கி 2019 மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களிலும் வெற்றியை மட்டுமே பதிவு செய்து வருகிறார். அந்த வரிசையில் இந்தத் தேர்தலிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 100 சதவீத வெற்றியை தேடித் தந்துள்ளதாக திமுக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.