நாடு முழுவதுமுள்ள 543 நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரி உட்பட 102 தொகுதிகளில், ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து, மீதமுள்ள தொகுதிகளில் 6 கட்டங்களாக கடந்த ஜுன் 1ம் தேதி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 7 கட்டங்களிலும் பதிவான வாக்குகள் இன்று காலை 8 முதல் எண்ணப்பட்டு வருகிறது.


தமிழ்நாடை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி இடையே 4 முணை போட்டி நிலவி வருகிறது. இம்முறை தமிழகத்தில் பாஜக எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வந்தது. அந்த வகையில் பாஜக தரப்பில் பல நட்சத்திர வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.


சென்னையை பொறுத்தவரை 3 மக்களவை தொகுதிகளிலும் பாஜக நட்சத்திர வேட்பாளரை களம் இறக்கியுள்ளது. அந்த வகையில் தெலங்கானா ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜனை பாஜக தென் சென்னையிலும், பால் கனகராஜை வட சென்னையிலும், வினோஜ் பி செல்வத்தை மத்திய சென்னையிலும் களம் இறக்கியது.


மேலும், நீலகிரியில் எல் முருகன், கோவையில் அண்ணாமலை, நெல்லையில் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன், தஞ்சையில் கருப்பு முருகானந்தம், சிதம்பரத்தில் கார்த்திகாயினி, மதுரையில் ராமசீனிவாசன், விருதுநகரில் ராதிகா சரத்குமார் என தமிழ்நாட்டில் நட்சத்திர வேட்பாளர்களை களம் இறக்கியது.


ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாஜக தரப்பில் களம் இறக்கப்பட்ட அனைத்து நட்சத்திர வேட்பாளர்களும் கடுமையான பின்னடைவு சந்தித்துள்ளனர்.  தென் சென்னை பொறுத்தவரை திமுக வேட்பாளரகளான தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி உள்ளிட்டவர்கள் முன்னிலையில் உள்ளனர். அதேபோல் கோவையில் அண்ணாமலை கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளார்.


திருநெல்வேலி தொகுதியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வெற்றிவாகை சூடுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், பின்னடைவு சந்தித்துள்ளார். திருநெல்வேலியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் முன்னிலை வகித்து வருகிறார்.


தமிழ்நாட்டில் இந்த நிலை நீடிக்க வட இந்தியாவில் பாஜக நட்சத்திர வேட்பாளர்களான ஹேம மாலினி, கங்கனா ரணாவத் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர்.