இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இச்சூழலில் யார் அடுத்த பிரதமராக வருவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேபோல் தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தவரை திமுக கூட்டணி தான் 40 தொகுதிகளையும் வென்றிருக்கிறது.


இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் இந்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மீதமிருந்த ஒரு தொகுதியையும் சேர்ந்து நாற்பதுக்கு நாற்பதை மக்கள் கொடுத்திருக்கின்றனர். 


இந்திய அளவில் INDIA கூட்டணியை அனைவரும் சேர்ந்து அமைத்தோம். கருத்து கணிப்பு என்ற பெயரில் பாஜக உளவியல் பிரச்சினையை கொடுத்தது. ஆனால் அது தவிடு பொடியாகியுள்ளது. 400 இடங்கள் என்று கூறிய பாஜகவுக்கு பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. பாஜகவின் பண பலம் எடுபடவில்லை. இந்த வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்கி விடுவோம்.


பாஜகவின் கனவு தமிழ்நாட்டில் எடுபடவில்லை. தாமரை மலரும் மலரும் என்று எப்படி மலராமல் போய்விட்டதோ! மோடியின் எதிர்ப்பலை இந்தியாவில் பல மாநிலங்களில் இருக்கிறது. அதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு” எனத் தெரிவித்தார். 


தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஸ்டாலின் பிரதமராவாரா என கேள்வி எழுப்பப்பட்டது. 


அதற்கு பதிலளித்த ஸ்டாலின் “கலைஞர் சொன்னதைத்தான் நானும் சொல்கிறேன். என் உயரம் என்ன என்று எனக்கு தெரியும்” எனத் தெரிவித்தார். 


மேலும், டெல்லி செல்ல உள்ளதாகவும் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.