எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு பேரவையில் கேள்வி எழுப்பினால், அதற்கான பதில் அழகாக பேரவையில் தரப்படும் என சபாநாயகர் அப்பாவு தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய நிலையில், இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை அளித்த பேட்டியில், “முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, முன்னாள் சட்டமன்ற தலைவர் சேடப்பட்டி முத்தையா உள்பட பல உறுப்பினர்களுக்கு இரங்கற் கூட்டம் நடத்தப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது.
நாளை காலை 10 மணிக்கு மீண்டும் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும். அதில், இந்த 2022- 2013 ம் ஆண்டு கூடுதல் செலவீனத்திற்கான வரவு, செலவு திட்டத்தினை நமது மாண்புமிகு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டமன்றத்தில் தாக்கல் செய்வார்கள். அதனை தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கான ஒரு அறிக்கை சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்படும்.
நாளை மறுநாள் கூடுதல் செலவீனத்திற்கான விவாதம், பதிலுரை, வாக்கெடுப்பு நடைபெறும். தேவைப்பட்டால் ஏதேனும் அரசினர் சட்டமுன்வடிவுகள் கொண்டு வரப்பட்டு விவாதித்து நிறைவேற்றப்படும். நாளை மற்றும் நாளை மறுநாள் புதன்கிழமை வரை பேரவை 2 நாட்களுக்கு நடைபெறும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அறிக்கை, ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும்.
அலுவல் மொழி கூட்டத்தில் ஒரு உறுப்பினராக ஐயா ஓ.பன்னீர் செல்வம் இருப்பதால் அவரது இருக்கையை நீட்டிக்க முடிவு செய்தோம். எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு பேரவையில் கேள்வி எழுப்பினால், அதற்கான பதில் அழகாக பேரவையில் தரப்படும்.” என சபாநாயகர் அப்பாவு தகவல் தெரிவித்துள்ளார்.