சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கான இருக்கைகளில் மாற்றம் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத்தலைவராக பன்னீர்செல்வம் நீடிப்பதாகவும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி இருக்கை அருகே துணைத்தலைவர் இருக்கை பன்னீர்செல்வத்துக்கான தொடர்ந்து நீடிக்கிறது. சட்டப்பேரவை விதியின்படி சபாநாயகருக்கு உள்ள உரிமை அடிப்படையில் துணைத்தலைவர் விவகாரத்தில் முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, நேற்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், சட்டமன்றத்தை பொறுத்தவரை சட்டப்பேரவைத் தலைவர் தான் இறுதி முடிவு. அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதற்கு கட்டுப்படுவோம் என தெரிவித்திருந்தார்.
அதே அடிப்படையில்தான் ஓ. பன்னீர் செல்வத்திற்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையோ, துணைத் தலைவரோ மாற்றப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி தரப்பு அளித்த கடிதம் மீது சபாநாயகர் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்.
இன்றைய பேரைவைக் கூட்டத்தில் பங்கேற்றால் ஓபிஎஸ் அருகிலேயே எடப்பாடி பழனிசாமி அமரவேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனால், பேரவையை புறக்கணித்துவிட்டு, அலுவல் ஆய்வு கூட்டத்தில் இந்த பிரச்னையை எழுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
பேரவை விதி எண் 6ன் படி இருக்கைகளை முடிவு செய்யவேண்டியது சபாநாயகரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால், அவரின் முடிவை எதிர்த்து பேரவையில் எந்த பிரச்னை செய்தாலும் அது உரிமை மீறலாகும். அதனால், பேரவைக்கு வெளியே எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது.