MBBS BDS Rank List : எம்.பி.பி.எஸ் படிப்புக்கான தரவரிசை பட்டியல்.. வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்டார். ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்ட நிலையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
மருத்துவப் படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, கடந்த 22-ஆம் தேதி ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 3-ஆம் தேதி, விண்ணப்பங்களுக்கான இறுதி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதி நிலையில் மேலும் மூன்று நாட்கள் அவகாசம் வழங்கி நீட்டிக்கப்பட்டது.
Just In




இதுகுறித்துப் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘’2022-23 ம் ஆண்டின் மருத்துவம், பல் மருத்துவப் படிப்பிற்கு அரசு, சுயநிதி மருத்துவ இடங்கள் , நிர்வாக மருத்துவ இடங்களுக்காக மொத்தமாக 22,736 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 இட ஒதுக்கீட்டில் 2695, விளையாட்டுப் பிரிவில் 216, முன்னாள் படைவீரர் பிரிவில் 356 விண்ணப்பங்கள் அடங்கும்.
அரசு, சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 6,067 மருத்துவ இடங்கள், 1380 பல் மருத்துவ இடங்கள் மற்றும் 7.5 % இட ஒதுக்கீட்டில் 454 மருத்துவ இடங்கள், 104 பல் மருத்துவ இடங்கள் உள்ளன. மருத்துவ கலந்தாய்வு 19ஆம் தேதி தொடங்கும். முதல் நாள் விளையாட்டு, முன்னாள் படை வீரர் , மாற்றுத்திறனாளி பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று, அன்று மாலையே சேர்க்கை அனுமதி வழங்கப்படும். பின் 20ஆம் தேதி 7.5 சதவீத இடத்திற்கான கலந்தாய்வு நடைபெற்று, சேர்க்கை அனுமதி வழங்கப்படும்.
7.5 % உள் ஒதுக்கீட்டில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தேவதர்சினி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று 518 மதிப்பெண் பிடித்து முதலிடம் பிடித்துள்ளார். 7.5 % இட ஒதுக்கீட்டில் 558 ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பைப் பயிலவுள்ளனர். இவர்களுக்கு மருத்துவம் சார்ந்த பாடங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட மடிக்கணிணிகள் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும்’’ என்று தெரிவித்தார்.