உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் அமைந்துள்ள தரியாய் என்ற கிராமம். நிபோரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்த கிராமத்தில் 130 அடி ஆழமுள்ள மூடப்படாத ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைந்துள்ளது. இந்த கிணற்றின் அருகே நேற்று காலை விளையாடிக் கொண்டிருந்த சிவா என்ற மூன்று வயது சிறுவன், திடீரென தவறி கிணற்றில் உள்ளே விழுந்தான். நீண்ட நேரமாக குழந்தையை காணாததால் அவனை காணாத பெற்றோர்கள், அவனது அழுகுரல் சத்தம் கேட்ட திசை நோக்கி சென்றுள்ளனர். அங்கு சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி உள்ளே விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


இதையடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆக்ரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனிராஜ், தேசிய பேரிடர் மீட்பு படைவீரர்கள், மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட 30 பேர் கொண்ட மீட்பு குழு உடனடியாக அந்த கிராமத்திற்கு சென்றுள்ளனர்.




உடனடியாக ஆழ்துளை கிணறு அருகே தடுப்புகள் அமைக்கப்பட்டு மக்கள் அருகே செல்லாமல் தடுக்கப்பட்டது. சிறுவன் சுவாசிப்பதற்காக உடனடியாக ஆக்சிஜன் குழாய் உள்ளே உடனே செலுத்தப்பட்டது. பின்னர் சிறிய கேமரா ஒன்றை உள்ளே அனுப்பி சிறுவன் என்ன நிலையில் இருக்கிறான் என்பதை உறுதி செய்தனர்.


கையை சிறுவன் மேலே அசைத்துக்கொண்டே இருந்ததால், கயிற்றை கட்டி சிறுவனை உள்ளே தூக்கிவிட முடிவு செய்தனர். சிறுவனது புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி, நாடு முழுவதும் சேவ் சிவா என்று டிரெண்டாகத் தொடங்கியது. மேலும், அதே தருணத்தில் ஆக்ராவில் முகாமிட்டிருந்த ராணுவ வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆழ்துளை கிணற்றுக்கு அருகே 3 பொக்லைன் இயந்திரங்களை கொண்டு குழிதோண்டும் பணியில் ஈடுபட்டனர். அனைத்து தரப்பினரும் விரைந்து செயல்பட்டதால் உடனடியாக 90 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்டது.




சரியாக மாலை 4 மணியளவில் குழியில் தவறி விழுந்த சிறுவன் சிவாவின் கையில் லாவகமாக கயிற்றைக் கொண்டு முடிச்சு போட்டனர்,  பின்னர், மெல்ல மெல்ல ஒருவர் சிறுவனை மேலே இழுக்க  சிறுவன் மேலே வந்தவுடன் அவனை லாவகமாக மற்ற வீரர்கள் தூக்கி மேலே கொண்டுவந்தனர்.


130 அடி ஆழ போர்வெல் குழியில் காலையில் குழியில் விழுந்த சிறுவனை, 8 மணிநேரத்திற்குள் மீட்டு இந்த பணியை வெற்றிகரமாக முடித்தனர். சிறுவனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனிராஜே தூக்கிச்சென்று ஆம்புலன்சில் சிகிச்சைக்காக அனுப்பினார். முறையாக பதற்றமின்றி திட்டமிட்டு, மத்திய மற்றும் மாநில மீட்பு படையினரின் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டதால்தான் சிறுவனை மீட்க முடிந்ததாக எஸ்.பி.முனிராஜ் கூறினார்.


மேலும் படிக்க : மதுரை : பல சட்டப் போராட்டங்களுக்கு பின் பெண் பூசாரியாக வென்ற பின்னியக்காளின் கதை தெரியுமா..!