மருத்துவப் படிப்புகளில் நன்றாகப் படித்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஆண்டு 7.5 சதவீத ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. அதன் மூலம் 400-க்கு மேற்பட்ட மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படித்துவருகின்றனர். அதைப்போலவே கால்நடை மருத்துவம், வேளாண்மை, பொறியியல், சட்டம் ஆகிய தொழில்படிப்புகளிலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு கொண்டுவரப்படும் என்று தெரிகிறது. 


இதைப் பற்றி ஆராய்ந்து அரசுக்கு யோசனை தெரிவிக்க, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி த. முருகேசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு வெளியிட்டுள்ளார்.


அதில், “ 2020- 21 ஆம் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோன்று பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளில், கடந்த ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை விவரங்களின்படி, அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னிலைவகிக்கும் சுயநிதி கல்லூரிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சேர்க்கைப்பட்டுள்ளனர் என்றும் இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடமிருந்து அரசுக்குக் கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.” என்றும்,




”இக்கோரிக்கைகளைத் தீர ஆராய்ந்து, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சமூக பொருளாதார நிலைகள் குறித்தும் அதனால் அவர்கள் சந்திக்கக்கூடிய இடர்பாடுகள் ஏதுமிருப்பின், அவற்றைக் கண்டறியவும், 
கடந்த ஆண்டுகளில் அந்த மாணவர்களின் சேர்க்கை பல்வேறு தொழிற்கல்வி நிறுவனங்களில் எவ்வாறு இருக்கிறது என ஆய்வுசெய்தும், மேலே கூறிய காரணிகளால் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் சேர்க்கையானது, பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், சட்டம் போன்ற படிப்புகளில் குறைந்த அளவிலேயே இருந்தால், அந்த நிலையை சரிசெய்யவும்,  இதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்யவும், 


டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஓர் ஆணையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்து இன்று உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணையம் தனது அறிக்கையை ஒரு மாதத்திற்குள் அரசுக்கு அளிக்கும்.” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த அதிமுக ஆட்சியின்போது மத்திய அரசுக்கு ஆதரவாக இருக்கிறது என பல தரப்பினரும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியநிலையில், கடந்த ஆண்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஓமியோ, சித்தா, ஆயுர்வேதா ஆகிய இந்திய மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை அதிமுக ஆட்சி கொண்டுவந்தது. முன்னதாக, கடந்த செப்டம்பர் 15 அன்று சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்டவரைவு, ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதற்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் இழுத்தடித்தார். அமைச்சர்கள் இதற்காகவே அவரைச் சந்தித்து வலியுறுத்தினர். அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் ஆளுநர் பன்வாரி லாலுக்கு கடிதம் அனுப்பினார். ஆனால் தாமதம் ஆகிக்கொண்டே போகவே, அக்டோபர் 29 அன்று தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றைப் பிறப்பித்தது. மறுநாளே ஆளுநர் இந்த சட்டவரைவுக்கு ஒப்புதல் அளித்தார். அது, முறைப்படி சட்டமாகி, முதல் முறையாக தமிழ்நாட்டின் சமகால வரலாற்றில் 400-க்கு மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் ஒரே ஆண்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர்.